article_1489645690-2சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள ஏரிஸ் 13 என்ற பெயரைக்கொண்ட கப்பலில் பயணித்த இலங்கையர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. காக்கைத்தீவு, காலி, அக்குரஸ்ஸ, ஹொரணை, தெவிநுவர, மத்துகம, கந்தானை, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேரந்த 8 பேர், குறித்த கப்பலில் இருந்தாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் தெரியவந்துள்ளது. கப்பலின் மாலுமியான நிக்கலஸ் அன்டனி (காக்கைத்தீவு), கப்பலின் பிரதான அதிகாரி ருவன் சம்பத் (மத்துகம), கப்பலின் மூன்றாம் நிலை அதிகாரி திலிப் ரணவீர (காலி), சுனில் பெரேரா (கந்தானை), கடற்படை அதிகாரி லகிரு இந்துனில் விதானபத்திரண (அக்குரஸ்ஸ), பிரதான பொறியியலாளர் ஜயந்த கலுபோவில (ஹொரனை), மூன்றாம் நிலை பொறியிலாளர் ஜனக சமேந்ர (தெவிநுவர), சமையற்காரர் ஏ.சண்முகம் (நீர்கொழும்பு) ஆகியோரே இந்த கப்பலில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, இந்தக் கப்பலை விடுவிப்பதற்கு, கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியுள்ளதாக வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை கொடியுடன், எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு பயணித்த இந்தக் கப்பலுடனான தொடர்பு திங்கட்கிழமை 13ஆம் திகதியுடன் துண்டிக்கப்பட்டுவிட்டன. அதனையடுத்தே அக்கப்பலை, சோமாலிய கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளதாக 14ஆம் திகதி, செய்திகள் வெளியாகின. கப்பல் தொடர்பில் சரியான தகவல்களை அறிந்துகொள்ளவதற்கு, பிரித்தானிய கேர்ணல் ஒருவர், கடற்கொள்ளையர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார். அதன் பயனாகவே, கொள்ளையர்கள் கப்பம் கோருவதாக, வெளிநாட்டு செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், கப்பமாக எவ்வளவு தொகை கோரப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லை. கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியிருப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையும் உறுதிபடுத்தியுள்ளது என்றும் பிரிதொரு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலானது, ஜனவரி மாதம் 28ஆம் திகதியன்று மாலை 5:35 மணியளவில் கொழும்பு துறைமுகத்திலிருந்து சோமாலியா மொகடீஜூ துறைமுகத்தை நோக்கி பயணித்தை ஆரம்பித்துள்ளது. இதேவேளை, சோமாலிய கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டின் கீழ் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் கொண்டுவரப்பட்ட முதலாவது வணிகக் கப்பல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.