( பாகம் 2 )

Rev.-Dr.-S.Jவண. பிதா. இம்மானுவல் அவர்கள் பிரிவினைக் கோரிக்கையினை எவ்வாறு கையாள்கிறார்? 

இவ் வேளையில் உண்மை, நீதி, சமாதானம் என்ற கோட்பாடுகளை அவர் பிரிவினைக் கோரிக்கைகளில் எவ்வாறு இணைத்துள்ளார்? என்பதனைப் பார்ப்பது அவசியமாகிறது.

விடுதலைப்புலிகளின் போராட்டத்தினை ‘சுய பாதுகாப்பு தேசியவாதம்’ என வரையறுக்கிறார். குடியேற்ற ஆட்சிக்குப் பின்னரான இலங்கை அரசுகள் தமிழ் மக்களைத் தமக்குப் பாதுகாப்பானதும், தமது உயிரையும், எதிர் காலத்தையும் பாதுகாத்து வளர்த்துக் கொள்ளும் நிலத்தை நோக்கித் தள்ளுவதாக அமைந்திருந்தது என்கிறார். இம் முடிவுகள் ஒழுங்கமைக்கப்பட்ட சிந்தனையுடன் கூடியதாகவும், பல்லினங்கள், பல மதங்கள் உடைய இலங்கை என்ற ஒரு நாட்டிற்குள் பாதுகாப்புடன் வாழ முடியும் என்ற கனவு இனி ஒருபோதும் சாத்தியமில்லை என்பதால், குடியேற்ற ஆட்சிக்கு முன்னர் காணப்பட்ட பாரம்பரிய வாழ்விடமே தமது தாயகம் என்ற முடிவுக்கு படிப்படியாக சென்றுள்ளனர் என்கிறார். இவ்வாறான விட்டுக்கொடுப்பற்ற நிலைக்குச் சென்ற அவர், இன்று அரசாங்க தரப்போடு பேசுவது இலகுவான முடிவாக இருந்திருக்க சாத்தியமில்லை. பலமான நம்பிக்கையின் அடிப்படையிலேயே அது சாத்திமாகும். அது என்ன? அவை மக்களோடு உண்மையாகவும், நீதியாகவும் பரிமாறப்பட்டுள்ளதா?

உண்மைக்காக குரல் கொடுக்கும் அவர் முழுமையான உண்மைகளை முழுமையாக விடுவிக்க தயங்கியிருப்பதை அவரது பல உரைகள் உணர்த்துகின்றன. தமிழ் மக்களின் அரசியல் வரலாறு மூன்று கட்டங்களினூடாக பயணித்ததாகவும், இம் மூன்று தருணங்களினூடாக தாமும் அதன் பங்குதாரியாக இருந்ததாகவும் கூறுகிறார். ஆரம்பம் வன்முறை அற்றதாகவும், பின்னர் வன்முறை கொண்டதாகவும், தற்போது வன்முறை அற்ற சர்வதேச அம்சங்களுடன் பயணிப்பதாகவும் கூறுகிறார். ஒரு நீண்ட அரசியல் வரலாற்றின் பங்குதாரியாக தன்னை அடையாளம் காட்டும் அவர், பாதி உண்மைகள் ஒரு போதும் நீதியை, சமாதானத்தைத் தரப்போவதில்லை என்பதை நிச்சயம் தெரிந்திருப்பார். ஆனால் அவை ஏன் முழுமையாக உரைக்கப்படவில்லை?

இப் பின்னணியில் அதாவது 2009ம் ஆண்டின் பின்னர் அவர் உண்மை, நீதி, சமாதானம் குறித்து எவ்வாறு வரையறுக்கிறார்? என்பதனைப் பார்ப்போம். உண்மை, சமாதானம், நீதி என்பவற்றின் உட் பொருள் மாறவில்லை. ஆனால் அவற்றை இன்றைய மாற்றத்தின் காரணமாக புதிய வழிமுறையை நோக்கி  நியாயப்படுத்தும் போக்குகள் மாறுகின்றன.

எந்தவித வாக்குறுதிகளும் வழங்கப்படாமலேயே தமிழ் மக்கள் தமது எதிர்காலத்தைப் பணயம் வைத்துள்ளார்கள் என இன்றைய நிலமைகள் குறித்து அவர் 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னரான மாற்றங்கள் தொடர்பாக அதிக நம்பிக்கை கொண்டவராக காணப்படுகிறார்.

தெற்கிலுள்ள விவேகமுள்ள கூட்டுத் தலைமையினர் பொது வேட்பாளரை முன்னிறுத்தி, மூவின மக்களும் இணைந்து ஜனநாயகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆட்சியை மாற்றியுள்ளதாக போற்றுகிறார். தமிழ் தலைவர்களின் காத்திரமிக்க முடிவுகளால் தேர்தலில் கலந்து ஜனநாயகத்தை நோக்கி மாற்றியுள்ளனர். மிக மோசமாகச் சென்றுகொண்டிருந்த ஊழலையும், சர்வாதிகாரத்தையும் கருவாக கொண்டிருந்த ஆட்சியை ஓர் வரலாற்றுக் கடமையைச் செய்து நாட்டைக் காப்பாற்றியுள்ளார்கள். வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என்ற குரலுக்கு தமிழ் மக்கள் செவிமடுத்திருந்தால் நாடு இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். எந்தவிதமான உறுதிமொழியும் இல்லாமலேயே தமது எதிர்காலத்தைப் பணயம் வைத்து தெற்கிலுள்ள மக்களுக்கும், தலைவர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளனர். அத்துடன் நாம் அனைவரும் கூட்டாக இணைந்து, இறுக்கமான அடிகளை உண்மை, நீதி, சமத்துவம், பொறுப்புக்கூறல் என்ற அடிப்படைகளில் செயற்பட்டால் அவை கைக்கெட்டிய தூரத்திற்கு வந்துவிடும் என்கிறார்.

தற்போதைய அரசு கடந்த கால தவறுகளை நிவர்த்தி செய்து ஊழல் அற்ற நல்லாட்சி, சட்ட அடிப்படையிலான ஆட்சியை நிறுவுவதற்கான பாரிய பொறுப்பினைக் கொண்டுள்ளது. உண்மைக்காகவும், நீதிக்காகவும் அழும் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்கவும், அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் காத்திரமான முடிவுகளை எடுக்கவேண்டும். தமிழ் மக்களுக்கான நீதி காலம் கடத்தப்படாமல் விரைவில் வழங்கப்படுமானால் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மத சிறுபான்மையினர் தமக்கான பங்கினையும, சமத்துவத்தையும் அனுபவிப்பார்கள் எனத் தெரிவிக்கிறார்.

இப் பின்னணியில் வண. பிதா. இம்மானுவல் அவர்கள் தற்போது வழங்கும் உரைகள் எந்த அடிப்படையில் எழுகின்றன? ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழ்த் தலைவர்கள் குறித்து எதுவும் பேசியதில்லை. முக்கிய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது கீழ்க் குரலிலேயே கண்டனங்கள் வெளியாகின. தாயகம், சுயநிர்ணய உரிமை என்பன ஏற்றுக் கொள்ளப்படாவிடில் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை எனக் கூறப்பட்டன.

இன்றைய ஆட்சியாளர் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. பதவிக்கு வந்த நாள் முதல் தீவிர இனவாதம்,சிங்கள பௌத்த தேசியவாதம் என்பன முன்னரை விட மிகவும் அப்பட்டமாக காணப்படுகின்றன. ஆளும் தேசிய அரசிற்குள் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றுவதிலும், தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை முன்மொழிவதிலும் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன.

இலங்கை அரசுடன் சமாதானத்தை மேற்கொள்வதற்கான அனைத்துப் பாதைகளும் மூடப்பட்ட நிலையில் தமக்கென பாதுகாப்பான நிலத்தை நோக்கி தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் எனக் கூறிய அவர், இன்று தமிழ்த் தலைவர்களின் தீர்க்க தரிசனம் குறித்தும், தெற்கு சிங்கள அரசியல் தலைமைகளின் புத்திசாலித்தனமான முடிவுகள் குறித்தும் சிலாகித்துப் பேசுவதன் அர்த்தம் என்ன? இலங்கை என்ற ஒட்டுமொத்தமான நாட்டினது எதிர்காலம் குறித்தும், அதில் மூவினங்களும் அமைதியாக வாழும் இனிய பொற் காலம் குறித்தும் கனவு காணும் வண. பிதா அவர்கள் இம் மாற்றத்திற்கான அடிப்படைகளை மேலும் விபரிப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இலங்கைத் தீவின் அரசுக் கட்டுமானம் ஜனநாயகம் செறிந்ததாக அமையுமானால் இப் பிரச்னைகள் தீரலாம் என்ற நம்பிக்கை அவரது சமீபகால சேமங்களின் தொனிப் பொருளாக உள்ளது. இதுவே முன் நிபந்தனை எனில் கடந்த காலத்தில் இதே கருப்பொருளை வலியுறுத்திய இதர ஜனநாயக சக்திகளையும் இணைத்துச் செல்ல வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். அதற்கான அழைப்பை இன்னமும் காணவில்லையே ஏன்? பரந்த ஜனநாயக கூட்டணியை அமைக்க அறைகூவல் விட தயங்குவது ஏன்?

தமிழர்களுக்கு சிங்களவர் கடன் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளார்கள் எனவும், அக் கடனில் சிறிது பகுதியைத் தர விரும்புவதால் அதனைப் பெற்று நன்றியையும் தெரிவித்த பின் மிகுதிக் கடனுக்காக வற்புறுத்தவேண்டும் என தற்போது கூறி வருகிறார். தமிழ்த் தலைமை, இலங்கை அரசு, ஜனநாயகம், இலங்கைத் தேசம், ஐக்கிய இலங்கை என்பன குறித்து அவர் தெரிவிக்கும் இன்றைய கருத்துக்கள் மிகவும் பலமானவை. காத்திரமானவை. ஆனால் இவை உண்மை எவ்வாறு பாதியாக, அரை குறையாக வெளிப்படுகிறதோ அதே போன்ற அவலத்தில்தான் இவையும் உள்ளன.

உலகத் தலைவர்கள் பலரை குறிப்பாக சோனியா காந்தி அவர்களைச் சந்தித்தது குறித்து 07-07-2012 இல் லண்டனில் நடைபெற்ற புவுகு கூட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூட்டம் நடத்தவேண்டிய நிலை அன்று ஏற்பட்டிருந்தது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை ஏற்றதாகக் கூறி கண்டனங்கள் எழுந்தன.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வில் தொடர்ந்தும் இவ்வாறான குழப்பங்கள் உள்ளன. கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட தமிழ்த் தேசியவாத சக்திகள் மத்தியிலே கருத்து வேறுபாடுகள் கூர்மை அடைந்துள்ளன. இம் மாற்றங்கள் மிகவும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் வெளிப்பாட்டில் ஒன்றுதான் சுமந்திரன் அவர்கள் மீதான கொலை அச்சுறுத்தல்கள் ஆகும்.

இங்கு உண்மை முழுமையாக பேசப்படவேண்டியுள்ளது. எதிர்கால அரசியல் பாதை குறித்து வெளிப்படையாகவும், உண்மையாகவும் உரைக்கவேண்டியுள்ளது. இவை குறித்து உரத்துப் பேச வண. பிதா தயங்குவதாகவே உணர்கிறோம். இன்றைய அரசியல் மாற்றம் தொடர்பாக காத்திரமான நியாயங்களை முன்வைக்கும் அவர், இவற்றை நிராகரிப்போரின் வாதங்களுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளார். அதே போலவே இம் மாற்றங்களை ஆதரிப்போருடன் அணியை உருவாக்கி மாற்றங்களை உந்தித் தள்ள உதவவேண்டும். அவர் தம்மை ஒரு தனி மனிதராக தொடர்ந்தும் உருவகித்து கிறிஸ்துவின் நற் செய்திகளைப் பரப்பும் தொண்டனாக கூறிச் செல்ல முடியாது. தமிழ் அரசியலில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கும் புவுகு இன் தலைவரான அவர், முழுமையான உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். குறிப்பாக தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் சம்பந்தமாக அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் கூட்டமைப்பினர் அரசியல் தீர்வின் இன்றைய நிலை குறித்து மௌனமாக உள்ளனர். இதனால் அரசியல் எதிரிகள் சந்தேகங்களைக் குவித்து வருகின்றனர். மிகவும் சிக்கலான அரசியல் சூழல் நிலவும் இவ் வேளையில் உண்மை நிலவரங்களை எடுத்துரைத்து மக்களையும் தம்முடன் எடுத்துச் செல்வது அவசியமானது. இவற்றைத் தேர்தல் அரசியலாக மாற்றுவதைத் தடுப்பதும் கடமையாகிறது.

இவற்றின் பின்னணியில் சில விவாதங்கள் தாயகத்தையும், புலத்தையும் இணைத்துச் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து முன்வைக்கப்படுகிறது. அவற்றைத் தற்போது பார்க்கலாம்.

போரின் விளைவாக புலப்பெயர்ச்சி இடம்பெற்றது. போரே புலம்பெயர்ந்தோரையும், தாயகத்தையும் பிரித்து வைத்தது. அதேவேளை போரே இந்த இரு சாராரையும் இணைத்தும் வைத்தது என ஆரம்பிக்கும் தமிழ்ப் பத்தி எழுத்தாளர் நிலாந்தன் பின்வருமாறு கூறுகிறார்.

வட மாகாணசபைத் தேர்தலின் பின்னர் அம் முடிவுகளைப் பின்னணியாக வைத்துக் கூறுகையில். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனத்தில்கொண்டு பார்க்கையில் அங்குள்ள தீவிர தேசிய சக்திகளின் மத்தியில் கூட்டமைப்பு மதிப்பிளந்து வருவதாகவும், பதிலாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே ஒப்பீட்டளவில் நண்பர்கள் அதிகம் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

வட மாகாணசபைத் தேர்தலின் பின்னர், கூட்டமைப்பு ஒரு ஏகபோக சக்தியாக மேலெழுந்து வரும் பின்னணியில் கூட்டமைப்பை மீறி ஈழத் தமிழ் அரசியலில் தங்களால் எதைச் செய்ய முடியும்? என்ற கேள்வி தமிழ்நாட்டின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலின் பின்னதான கூட்டமைப்பின் போக்குகள் அவ்வாறான ராஜதந்திர தரிசனத்தைக் காட்டவில்லை என்கிறது. களத்தையும், புலத்தையும், தமிழ்நாட்டையும் ஒரு கோட்டில் கொண்டுவரும் நிகழ்ச்சி நிரல் அவர்களிடம் இல்லை என்கிறார்.

தமிழ் புலம்பெயர் அமைப்புகளும், தமிழ்நாடும் இரு பிரதான நெம்புகோல்கள் எனக் குறிப்பிடும் அவர், இவற்றை வெற்றிகரமாக கையாளமுடியாத எந்த வியூகமும் சக்திமிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குச் சேவகம் செய்வதிலேயே சென்று முடியும். தீவின் எல்லைகளுக்கு அப்பால் சென்றுள்ள விவகாரமாக மாறிவிட்ட நிலையில் இவ்விரு தளங்களும் பிரதான ஆடு களங்கள் எனவும், இவற்றை விலக்கி கூட்டமைப்பு செயற்படுமாயின் இரு சிறகுகளையும்வெட்டிய பின் பறக்க எண்ணும் பறவையின் நிலை போன்றது என்கிறார்.

இக் கட்டுரையில் வெளியிடப்படும் அரசியல் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் அதற்கான சக்திகளை அடையாளம் காட்டும் அணுகுமுறை விபரீதமானது. தமிழ்நாட்டின் அடிமட்டத் தொண்டர்கள் கூட்டமைப்பை மீறி எதைச் செய்ய முடியும்? என்ற ஆதங்கத்தில் இருப்பதாக கூறிச் செல்வது அப்பட்டமான ஜனநாயக மீறலுக்குத்  துணை போவதாகிறது. இவர்கள் யாருக்கு அடிமட்டத் தொண்டர்கள்? எக் கொள்கைகளுக்குத் தொண்டர்கள்? எவ்வாறான அமைப்பை உருவாக்கி உள்ளார்கள்? வட மாகாணசபைத் தேர்தலில் அமோக ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பிற்கு மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பை, அதன் உள் நோக்கங்களை ஆராயாமல், ஆதரிக்காமல், முன்னெடுக்காமல் அதனை நிராகரித்துச் செல்லும் அவர்களுடன் எந்த அடிப்படையில் நேர்கோட்டில் பயணிப்பார்கள்? இப் பயணத்திற்கான பொது உடன்பாடு என்ன?

இவ்வாறான நேர்கோட்டுப் பயணக் கதைகளின் பின்னணியில் வன்முறை அரசியல் இணைந்து தொழிற்படுகிறது. ஜனநாயக மறுப்பு இருக்கிறது. மக்களின் ஜனநாயகத் தீர்ப்பினை உதாசீனம் செய்யும் அரசியல் எவ்வாறு ஜனநாயகத் தீர்வினைத் தர முடியும்?

தமிழ் அரசியலில் காணப்படும் கடந்தகால தோல்வி அடைந்த அரசியல் கூறுகள் மீண்டும் தலையெடுக்க முனையும் அவல நிலை தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் காணப்படுகிறது. இவற்றிற்கெதிரான போராட்டம் உண்மை, நீதி, சமாதானம் என்பவற்றிற்கான முழுமையான, வெளிப்படையான அடிப்படைகளில் நடத்தப்படுவது அவசியம்.

வடஅயர்லாந்தின் விடுதலை ராணுவம் தனது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டபோது ஆயுதப் போராட்டத்தைத் தந்திரோபாய அடிப்படையில் கைவிடவில்லை. அது இனித் தேவையில்லை என்ற அடிப்படையில் சமாதானம் என்ற பயணத்தில் இறங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

சமீப காலமாக ஜெனிவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மாநாட்டில் இலங்கை ஏற்றுக்கொண்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் கோரியுள்ளது. கூட்டமைப்பின் ஓரு சாரார் அதனை ஆதரிக்க இன்னொரு சாரார் எதிர்த்து வருகின்றனர். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மிகவும் கடுமையான நிபந்தனைகளுடன் கால அவகாசத்தை வழங்கலாம் என ஆணையகத்தைக் கோரியுள்ளன. அங்கு வண. பிதா சென்றிருப்பதாக அறிகிறோம். கிடைக்கும் செய்திகளின்படி அவரும் கால அவகாசம் வழங்குவதை விரும்பவில்லை என அறிகிறோம். ஒரு நீண்டகால நோக்கோடுதான் அவர் அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து வருகிறார். அவ்வாறெனில் அடிக்கடி ஏற்படும் இக் குழப்பத்தின் காரணம் என்ன?

தமிழர் தேசியக் கூட்டமைப்பினாலும்,புவுகு இனாலும் முன் வைக்கப்படும் தற்போதைய பயணங்கள் அரசியல் தந்திரோபாயமா? அல்லது நிரந்தர வழி முறையா? இவை தெளிவாகும் பட்சத்தில் ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் ஒதுங்கி நிற்க முடியாது. உண்மை உரைத்தலும், வெளிப்படைத் தன்மையும் மேலோங்குமானால் தேசிய ஒற்றுமை தானாக மலரும்.

முற்றும்.