NRTSL( எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி மேற்படி பிரச்சனை குறித்து லண்டனில் புலம்பெயர் இலங்கையர் ( தமிழர்) அமைப்பினால் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல் தொடர்பான முன்னோட்டம் இதுவாகும் )

2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியத்தவம் வாய்ந்த தேர்தலாகும். இலங்கையின் மிக பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன முதன் முதலாக இணைந்து செயற்பட்ட தேர்தலாகும். சிங்கள மக்கள் மத்தியிலே மிகவும் பலமான அரசியல் சக்தியாகவும், சிங்கள மக்களின் ஆதரவை மட்டும் பெற்று ஜனாதிபதியாகலாம் என்ற கருத்தோட்டம் ஆழமாக வேருன்றியிருந்த வேளையில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் ஒன்றிணைந்து அவ்வாறான எண்ணப் போக்கைத் தோற்கடித்து தேசிய ஐக்கியத்தை, ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய தேர்தலாகும். மிகவும் கூறுபட்டுக் கிடந்த தேசிய இனங்கள் நாட்டில் ஊழலற்ற, ராணுவ தலையீடற்ற தேசிய நல்லிணக்க அரசின் அவசியத்தை உணர்ந்து செயற்பட்ட தேர்தலாகும்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி பொது வேட்பாளராக   ஜனவரி 8ம் திகதி போட்டியிட்டுத் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன அவர்கள் பின்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைவரானார். ஆனால் இரண்டு அமைப்புகள் மத்தியிலேயும் அவருக்கு கணிசமான எதிர்ப்புகள் இருந்தன. கட்சி யந்திரத்தின் ஆதரவும், கணிசமான வாக்காளர் ஆதரவும் மகிந்தவிற்கு இருந்தமையால், அவர் எப்போதுமே மைத்திரியின் தலைமைக்கு சவாலாகவே செயற்பட்டார். கட்சிக்குள் இடம் பெற்ற உள் முரண்பாடுகள் மகிந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பை அளித்தன. இதன் விளைவாக அவர் பாராளுமன்றத்தில் இணைந்த எதிர்க்கட்சியென தம்மை அழைக்கும் ஒரு குழுவாக செயற்பட முடிந்தது.

இதனால் மைத்திரி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர்  பெரும் உள்கட்சி நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தனர். இதே போன்று ஐ தே கட்யினர் மத்தியிலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நெருக்கமாக செயற்பட முடியவில்லை. மிக அவசர அவசரமாக இரு கட்சிகளும் இணைந்து செயற்பட தீர்மானித்ததால் பழைய சந்தேகங்கள் இணைந்து செயற்படுவதற்கு தடையாக அமைந்தன. இந் நெருக்கடிகள் ஜனாதிபதியின் மக்கள் செல்வாக்கையும், ஆட்சித் திறனையம் பரிசோதிப்பவையாக அமைந்தன. குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கென இரண்டு கட்சிகளும் புரிந்தணர்வு ஒப்பந்தத்தினை ஏற்படுத்திய வேளையில் இவ் ஏற்பாட்டினையும் மகிந்த தரப்பினர் எதிர்த்தனர். ஐ தே கட்சிக்கு எதிரான பிரச்சாரங்களுடன், சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஐ தே கட்சிக்கு விற்றுவிட்டதாக, தேசத் துரோகம் புரிந்ததாக கூறி சிறீலங்கா சுதந்திரக் கட்சியைக் காப்பாற்றப் போவதாக பிரச்சாரங்கள் அமைந்தன.

அரசிலுள்ள இந்தப் பிரதான கட்சிகளிடையே காணப்பட்ட உள் நெருக்கடிகள் அரசின் திட்டங்களை முன்னெடுப்பதில் தாமதங்களை ஏற்படுத்தியது. இதனால் காத்திரமான அரசாக தொழிற்பட முடியவில்லை. அத்துடன் எதிர் தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதில்களை வழங்கவோ சவால்களுக்கு முகம் கொடுக்கவோ முடியவில்லை.

2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் மிகவும் காத்திரமான ஆதரவை வழங்கிய தமிழர் தேசியக் கூட்டமைப்பு முன்னெப்போதையும் விட தனது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியது. பிரிவினைக்கு எதிராக தனது நிலைப்பாட்டை உறுதி செய்ததோடு, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள், அதிகாரப் பரவலாக்கம், அதிகார பகிர்வு அடிப்படையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கத் தயாராகியது. இதன் காரணமாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்லைவர் என்போருக்கிடையே சிறந்த புரிந்தணர்வு ஏற்பட்டது. அரசு எதிர்நோக்கும் இடைஞ்சல்களை முத் தரப்பும் பரிமாறிக் கொள்ளும் உறவாக அமைந்தது. ஆனால் இப் புரிந்துணர்வை அதன் தாற்பரியத்தை கூட்டமைப்பிற்குள் அல்லது மக்கள் முன் எடுத்துரைக்க கூட்டமைப்பால் முடியவில்லை. கூட்டமைப்பின் உள் கட்டமைப்பிற்குள் ஜனநாயகம் காணப்படவில்லை. பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதில் காணப்படும் போட்டிகள் கட்சிகளிடையே காணப்பட்ட பலவீனங்களை அரசியலாக்கும் வழிமுறை அதிகளவில் காணப்பட்டது. இதனால் அரசுடனான புரிந்துணர்வை உரிய முறையில் உட் கட்சிக்குள் எடுத்துரைப்பது கடினமாகியது. இதனால் அங்கு காணப்பட்ட ஜனநாயகப் பற்றாக்குறை சில கட்சி முக்கியஸ்தர்களின் கரங்களைப் பலப்படுத்தியது. குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் அரசுடனான தொடர்புகளை வலுப்படுத்தியதோடு முக்கிய தீர்மானங்களையும் அங்கு காணப்பட்ட பலவீனமான பொறிமுறைகளின் உதவியுடன் மேற்கொள்கின்றனர். கூட்டமைப்பிற்குள் காணப்படும் ஜனநாயகமற்ற சூழல், முக்கிய தீர்மானங்களை சிலர் எடுக்கும் போக்கு போன்றன கட்சிக்குள்ளும், வெளியிலும் குறிப்பாக மக்களை இருட்டிற்குள் வைத்திருப்பதாகவே கருதப்படுகிறது. தென்னிலங்கையில் காணப்படும் அரசியல் நெருக்கடி குறிப்பாக தேசிய இனப் பிரச்சனை குறித்தும், அரசிற்கும் கூட்டமைப்பிற்குமிடையே உள்ள உறவுகள் குறித்தும் சிங்கள தேசியவாத சக்திகள் எழுப்பி வரும் சந்தேகங்கள் அங்கு அரசியல் ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதால் தமக்கும், அரசிற்குமிடையேயுள்ள புரிந்தணர்வை கட்சி மட்டத்தில் அல்லது மக்கள் மத்தியில்  பகிரங்கமாக எடுத்துச் சொல்ல கூட்டமைப்பால் அல்லது அரசால் முடியவில்லை. அவை மேலும் ஸ்திரமற்ற சூழலைத் தரலாம் என்ற அச்சம் இரு தரப்பார் மத்தியிலும் காணப்படுகிறது.

ஆனால் இவை தொடர்ந்து செல்லுமாயின் மக்கள் அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையை இழப்பார்கள். இவை சந்தர்ப்பவாத அரசியலையே வலுப்படுத்த உதவும். தமது அரசியல் நிலைப்பாட்டைப் புரிந்து கட்சிக்கு உள்ளும், வெளியிலும் செயற்படும் ஜனநாயக சக்திகளோடு உறவுகளை ஏற்படுத்தி தமது செயல்களுக்கு வலுவூட்ட இவர்கள் முயற்சிப்பதாகவும் காணவில்லை. இவை தொடர்ந்து காணப்படுமாயின் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அழுத்தங்கள் உள்நாட்டில் பலவீனமாகும். இவை வெளியார் தலையீட்டை மேலும் அதிகரிப்பதோடு மிக மோசமான தீர்வுகளை நோக்கி இட்டுச் செல்லும்.  இதனை மாற்ற யார் உதவுவது?

இத் தருணத்தில் அதாவது 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக நாட்டில் நிலவும் ஜனநாயக விரோத நிலமைகள் குறித்து புலம்பெயர் இலங்கையர் ( தமிழர் ) அமைப்பு பல விவாதங்களை நடத்தியது. அதன் அடிப்படையில் மகிந்த தலைமையிலான அரசை மாற்றவேண்டுமென முடிவு செய்தனர். அவ் வேளையில் பிரித்தானியா வந்திருந்த அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் அவர்களைச் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்ததோடு அத் தேர்தலில் பொது அபேட்சகராக போட்டியிட்ட மைத்திரி அவர்களை ஆதரிக்கும்படி பகிரங்கமாக மக்களைக் கோரியது நினைவூட்டப்படுவது அவசியமாகும்..

2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிய ஜனாதிபதித் தேர்தலிபோது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், தேர்தல் முறையை மாற்றுதல், தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வை எட்டுதல் என்பன முக்கிய குறிக்கோளாக முன் வைக்கப்பட்டன. ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கிடையே காணப்பட்ட இணக்கப் போக்கு,குறிப்பாக ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தனது கட்சியில் ஏற்படுத்திய அமைதியான கலந்துரையாடல்கள் அரசியல் அமைப்பில் 19வது திருத்தத்தை நிறைவேற்ற உதவின. இதன் காரணமாகவே சுயாதீன ஆணைக் குழுவினையும், பாராளுமன்றத்தினை  தொகுதிகளின் பேரவையாகவும் மாற்றி புதிய அரசியல் யாப்புப் பற்றி வாதங்களை முன்னெடுக்க உதவியது.

இவை யாவும் நிறைவேற்றப்படுகையில் தேசிய ஐக்கிய அரசின் நிலைப்பாடுகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சவால்களை எதிர்நோக்கின. கடந்த கால அரசின் ஊழல் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருந்தன. ஊழல் விசாரணைகளில் தலையீடுகள், நிதி மோசடி விசாரணைகளிலும், வழக்குகளிலும் ஏற்படும் கால தாமதங்கள், இக் குற்றங்களில் தற்போதைய அரச தரப்பினரின் இணைவுகள், அரசியல் அமைப்பு மாற்றம், ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தல் போன்றவற்றில் இன்னமும் தெளிவான உடன்பாடு இல்லாத போக்குகள் போன்றன தடைகளாக உள்ளன..

மிகப் பெருந்தொகையான கடன் நிலுவைகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தது போல் ஏற்படவில்லை. இதனால் எதற்கு முன்னுரிமை கொடுப்பது?என்பது சிக்கலாகியது. பொருளாதாரக் கட்டமைப்புத் தொடர்பாகவும் ஒருமித்த கருத்து இல்லை. அமைச்சர்களிடையே பகிரங்கமான கருத்து வேறுபாடுகள், இழுபறிகள், குற்றச்சாட்டுகளை மாறி மாறி முன்வைத்தல் என்பன மக்களின் நம்பிக்கையைக் குலைத்து வருகின்றன.

பொருளாதார மாற்றம் ஏற்படுள்ளதாக அரசு கூறி வருகின்ற போதிலும் மக்கள் அதன் பலன்களை நேரடியாக இன்னமும் உணரவில்லை. மத்திய தர வர்க்கத்தினர் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார மாற்றம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவில்லை எனக் கூறி வேலை நிறுத்தம்,ஆர்ப்பாட்டம் என்பவற்றில் இறங்கியுள்ளனர்.

இன்றைய தேசிய ஐக்கிய அரசு எதிர்நோக்கும் பிரச்சனைகளை சரியாக அடையாளம் காணப்படுவது அவசியம். தேசிய அரசியல் ஸ்திரமற்ற நிலையில் இனப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது? நாட்டில் கட்சி அரசியலை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற ஆட்சி நிலவுவதால் அரசாங்கம் மக்கள் ஆதரவை இழக்கவும் தயாராக இல்லை. அத்துடன் இனவாதம், சிங்கள பௌத்த தேசியவாதம் முன்னர் எப்போதையும் விட பலமாகவும், ராணுவ பக்கபலத்துடனும் செயற்படுவதால் அரசியல்வாதிகள் சிக்கலான தீர்மானங்களை எடுப்பதற்குத் தயங்குகின்றனர். இந்த யாதார்த்தங்களை மக்கள் புரிந்து கொள்ளாது உணர்ச்சிகளுக்குத் தொடர்ந்தும் அடிமையாவர்களாயின் மிக மோசமான விளைவுகளை எதிர்நோக்கலாம். இவற்றை விரித்துரைப்பது யார் பொறுப்பு?

போதாக் குறைக்கு வேறு பல பிரச்சனைகளும் அரசைத் துரத்துகின்றன. ஜெனிவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல், குறிப்பாக இடைக்கால நீதி,போர்க்குற்ற விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலயம், கலப்பு நீதிமன்ற அமைப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குதல்,ஐரோப்பிய சந்தைகளில் இலங்கை உற்பத்திகளை சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்தல்  போன்றன பல சிக்கலான தடைகளைத் தாண்ட வேண்டும்.

முதலில் இந்த அரசை ஸ்திரமாக்க வேண்டியுள்ளது. இக் கருத்து சிலருக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். அவ்வாறானால் மாற்றுச் சூழல் இருப்பதாயின் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும். தற்போதுள்ள அரசியல் சூழல் முன்னெப்போதையும் விட வாய்ப்பாக உள்ளது. தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவதில் சிங்கள மக்களும் இணைந்து வருகின்றன. பலர் எண்ணற்ற தியாகங்களையும் புரிகின்றனர். தாராளமாக ஜனநாயக இடைவெளி உள்ளது. இதனைப் பயன்படுத்தி அரசிற்கு மாற்றங்களை உந்தித் தள்ள முடியும். இவை ஒரு வழிப் பாதை அல்ல. அவை இரு வழிப் பாதை நாமும் தேசிய நல்லிணக்கத்தை, தேசிய பொருளாதாரத்தை, ஸ்திரமான அரசை உருவாக்க எமது பணியைச் செலுத்த வேண்டும். இந்த யதார்த்தங்களை யார் எடுத்துக் கூறுவது?

உள்நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிகள் அரசியலை ஆழமாகப் பார்க்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கப் போவதில்லை. மக்களுக்கு தினமும் செய்திகளை எடுத்துச் செல்லும் ஊடகங்கள் வெவ்வேறு நலன்களுடன் செயற்படுவதால் உண்மையான செய்திகள் மக்களைச் சென்றடைவதில்லை. சுயாதீனமான கருத்துக்களுக்கு ஊடகங்களில் இடமில்லை. பலமான சிவில் அமைப்புகள் இல்லை. இந் நிலை தொடருமாயின் அபிவிருத்தி, முன்னேற்றம் பாதிக்கப்பட்டு மக்கள் மேலும் பாதிக்கப்படுவர். இதன் காரணமாகவே நாம் இன்றைய அரசியல் குறித்தும் கவலைப்பட வேண்டியுள்ளது.

இந் நிலையில் புலம்பெயர் இலங்கையர் குறிப்பாக தமிழர்கள் ஆற்ற வேண்டிய பங்கு நிறைய உண்டு. தற்போது மேற்குலக நாடுகளில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகளால் தத்தமது நாடுகளில் முதலீடு செய்ய வேண்டுமென மக்களின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. பல்தேசிய நிறுவனங்கள் லாப நோக்கில் தொழில் நிறுவனங்களை மலிவான கூலியை நோக்கி உற்பத்தியை மாற்றிய போக்கு தற்போது மாறி வருகிறது. அமெரிக்க உற்பத்தியை வாங்குங்கள். அமெரிக்க உற்பத்தியை விற்பனை செய்யுங்கள் எனக் கூறி தேசிய உற்பத்திக்கான பாதுகாப்பை மேற்கு நாடுகள் அதிகரித்து வருகின்றன. பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியுள்ளது. திறந்த பொருளாதாரம், கட்டுப்பாடற்ற பொருளாதாரம் எனக்  கூறிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்கு நாடுகள் வலதுசாரி தேசியவாத அரசிலிற்குள் பிரவேசித்துள்ளன. இதனால் பல்தேசிய நிறுவனங்கள் தத்தமது நாடுகளில் முதலீட்டை மேற்கொள்ளவும், அதற்கான ஊக்குவிப்பை வழங்கவும் மேற்கு நாடுகள் தயாராகி வருகின்றன.

இதனால் மூன்றாவது உலக நாடுகளில் முதலீடு செய்வது குறைவதோடு, அந்நிய முதலீட்டிற்கான வட்டியும் அதிகரிக்கும் ஆபத்துகள் உள்ளன. இவ்வாறான சிக்கலிலிருந்து இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் விடுபட வேண்டுமெனில் தத்தமது புலம்பெயர் மக்களை தமது தாயகங்களில் முதலீடு செய்யும்படி ஊக்கப்படுத்த வேண்டும். இந் நிலை இந்தியாவிலும், இலங்கையிலும் படிப்படியாக ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இலங்கையில் இரட்டைப் பிரஜா உரிமையை வழங்கி முதலீட்டை ஊக்கப்படுத்தி வருகிறது.

பிரித்தானியாவில் செயற்பட்டு வரும் புலம்பெயர் இலங்கையர் ( தமிழர் ) அமைப்பு இலங்கை அரசிற்கு பலவித ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உதாரணமாக புலம்பெயர் மக்கள் தமது தாயகம் செல்லவும், அங்கு நீண்ட காலம் தங்கி அங்குள்ள நிலமைகளுக்கு ஏற்ப முலீடுகளையும், அபிவிருத்திகளையும் மேற்கொள்ள விசா அனுமதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என வற்புறுத்தி வந்தது.

இதன் விளைவாக தற்போது வெளிநாட்டு கடவுச் சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கையர்கள் குறிப்பாக முதலீட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையோர் நீண்ட கால விசா அனுமதியை அதாவது 2 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரை பெறுவதற்கான ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இரட்டைப் பிரஜா உரிமை பெற முடியாதவர்கள் 5 வருடங்கள் வரை தங்க விசா அனுமதி பெற முடியும். இலங்கைப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்க விரும்புவோர் அப் பட்டப்படிப்பிற்கான முழுமையான காலத்திற்கும் ஒரே தடவையில் விசா அனுமதி பெற முடியும்.

புலம்பெயர் மக்கள் போரின் காரணமாக வெளியேறியதால் தமது நிலங்களை உரிய விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. போரின் போதும், போரின் பின்னரும் சட்ட விரோதமாக மாற்றப்பட்ட காணி உரித்துகள் தொடர்பாக அரசு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. இவை புலம்பெயர் மக்களின் கவலைகளாக உள்ளன. இவை குறித்து அரசுடன் பேசி தேவையான சட்ட மாற்றங்களை கொண்டு வருவதற்கு காத்திரமான புலம்பெயர் அமைப்பு அவசியமானது.

தற்போது இலங்கையில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொகை அதிகமாகி உள்ளது. குறிப்பாக தமிழர் தாயகங்களில் இவர்களைப் பராமரிப்பதற்கான அமைப்புகள், பயிற்சி பெற்றோர் மிகவும் குறைவாகவே உள்ளது. இப் பற்றாக் குறையை நிவர்த்திக்க வேண்டுமெனில் அரசு, தனியார் இணைந்த முதலீடு அவசியமாகும். இதற்கான முதலீடு ஒப்பீட்டளவில் சிறு தொகை என்பதால் புலம்பெயர் மக்களால் இந்த இடைவெளியை நிரப்ப முடியும். இதனை அரசுடன் பேசியே நிவர்த்திக்க முடியும்.

புலம்பெயர் மக்களில் பலர் அறிவுத்துறையில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாக வளர்ந்து வருகின்றனர். இவர்களை இலங்கை உரிய கௌரவத்தை வழங்கி மேலும் பல சலுகைகளை அறிவிக்குமாயின் கல்வி, தொழில் நுட்பம், சிறு கைத்தொழில் முதலீடு, சுகாதாரம் போன்றவற்றில் குறுகிய காலத்தில் அதிக பலனைப் பெற முடியும். அரசின் அணுகுமுறைகள் இரு தரப்பினருக்கும் பலன் தரும் வகையில் அமையுமாயின் அது பெரும் வரப்பிரசாதமாகும். இவற்றைச் செயற்படுத்துவதற்கு புலம்பெயர் சமூகம் இலங்கை அரசுடன் அரசியலுக்கு அப்பால் உறவை வளர்க்க வேண்டும். மக்களின் நலன்களை எட்டுவதற்கு அரசியல் தடையாக அமையக்கூடாது. சுதந்திரத்திற்குப் பின்னதான அரசியல் இந்த அனுபவத்தையே தந்துள்ளது. இதன் அவசியத்தை தற்போது இலங்கை அரசு உணர்ந்துள்ளதாக தெரிகிறது. உதாரணமாக பிரித்தானியாவிற்கு வரும் இலங்கை அமைச்சர்கள் புலம்பெயர் அமைப்புகளை தற்போது சந்திக்கத் தவறுவதில்லை.

எனவே லண்டனில் நடைபெறும் புலம்பெயர் இலங்கையர் அமைப்பினரால் நடத்தப்படும் சந்திப்பு காலத்தின் தேவை எனக் கருதுகிறோம்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்