e7b4Polythene-Carrier-Bags_12072017_KAA_CMYமெல்லிய பொலித்தீன் , லஞ்ச் சீற் மற்றும் பிளாஸ்ரிக் பீங்கான், கோப்பை, கரண்டி ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவற்றை இறக்குமதி செய்வதும் விற்பனை செய்வதும் தடைசெய்யப்படுவதாக அமைச்சரவை இணை பேச்சாளர்களான அமைச்சர்கள் கயந்த கருணாதிலக, ராஜித சேனாரத்ன ஆகியோர் நேற்று தெரிவித்தனர். அடுத்த வாரம் முதல் இந்த தடை அமுலுக்கு வரவுள்ளது.

இதேவேளை, பிளாஸ்ரிக் மூலப் பொருட்கள் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் என்பவற்றிற்கு 15 வீத செஸ் வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதோடு மீள் சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதை முற்றாக தடைசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவித்த இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக,

பொலிதீன் மற்றும் பிளாஸ்ரிக் ஊடாக ஏற்படும் சூழல் பிரச்சினைகளை மட்டுப்படுத்துவதற்காகவும் பொலிதீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை முகாமைத்துவம் செய்யவுமென தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டு திட்டம் என்பன தயாரிக்க நிபுணர்கள் குழுவொன்று 2016 செப்டம்பர் 6 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட குறுங்கால , மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை அமுல் படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. மெல்லிய பொலித்தீன்களைத் தடை செய்வது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, 20 மைக்ரோன் (microns) அல்லது அதற்குக் குறைந்த அடர்த்தியுடைய பொலித்தீன் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்தி என்பவற்றை தடைசெய்து சட்டத்தை தொடர்ந்து செயற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய, சமயம், சமூகம், கலாசாரம் மற்றும் அரசியல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பொலித்தீன் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

அத்தியவசிய செயற்பாடுகளுக்காக 20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தீனை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

உணவுகளைப் பொதி செய்யப் பயன்படுத்தப்படும் லஞ்ச் சீட்களை (lunch sheets) இறக்குமதி செய்யவோ தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளன.

பொலித்தீனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவைப் பொதி செய்யும் பெட்டிகள், பிளாஸ்டிக் கோப்பைகள், கரண்டிகள் போன்றவற்றின் உற்பத்தி செய்தல் இறக்குமதி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொலித்தீன்களில் சுற்றி பதப்படுத்தப்பட்ட அல்லது சமைத்த உணவுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை வாங்கும் போது பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு மாற்றீடாக சூழலுக்கு உகந்த துணி, கடதாசி பைகள் போன்றவற்றை பயன்படுத்தவும் உக்கக் கூடிய பிளாஸ்ரிக் உற்பத்திகளை மேற்கொள்வதற்கும் ஊக்குவிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திறந்த இடங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கை எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயிரியல் ரீதியில் அழிக்கக் கூடிய பிளாஸ்ரிக் மூலப் பொருட்களை அறிமுகப்படுத்தவும் ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,இந்த குறுங்கால திட்டங்களுக்கு அடுத்த வார அமைச்சரவையில் அனுமதி கிடைத்ததும் அவை அமுலாகும். ஏனைய மத்திய நீண்ட கால திட்டங்கள் பின்னர் அமுல் படுத்தப்படும் என்றார்.