Laksiri-Fernando_1பௌத்தம் ஒரு தத்துவம், இந்த சிக்கலான உலகத்துக்கு வழங்குவதற்கு அதனிடம் ஏராளமானவை உள்ளன, ஸ்ரீலங்காவுக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்குமே பெருமளவு மெய்யியல் அறிவை அதனால் வழங்க முடியும். மற்ற மதங்களுக்கும் மற்றும் சமூகங்களுக்கும் பாரபட்சமான முறையில் மகாநாயக்க தேரர்கள் அரசியலில் தலையீடு செய்தாலோ அல்லது அரசாங்கத்துக்குப் பின்னால் மற்றொரு அரசாங்கமாக இயங்க முயற்சித்தாலோ அந்தக் காரணத்திற்கு பெரும் சேதம் ஏற்படும்

மிகைப்படுத்தலுக்கோ அல்லது அதிகம் எச்சரிக்கை அடைவதற்கோ அவசியம் இல்லை, ஆனால் அரசாங்கத்துக்குப் பின்னால் மற்றொரு அரசாங்கம் இருப்பதாகத் தோன்றுகிறது. அது ஒரு நிழல் அரசாங்கமோ அல்லது சமாந்தரமானதோ எதுவாயிருப்பினும் விவாதத்துக்கு இலக்காகி உள்ளது. அது ஒரு நீண்ட தூக்கத்தின் பின்னர் மீண்டும் எழுந்துள்ளதுடன் மற்றும் புதிய அரசியலமைப்பை தொடங்க வேண்டாம் என்று அரசாங்கத்துக்கு அறிவுறுத்தலும் விடுத்துள்ளது. நான் இங்கு குறிப்பிடுவது ஜூலை 5ல் வெளியிடப்பட்ட திரி நாயக்க மகாநாயக்க தேரர்களின்(மூன்று பௌத்த பீடங்களினதும் தலைமைப் பிக்குகளின்)புதிய அறிக்கையைப் பற்றி. இந்த நிழல் அரசாங்கத்தின் முன்னணிப் பிரிவான அஸ்கிரிய நிக்காயா தற்போதையதைக் காட்டிலும் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றொன்றை முன்னர் வெளியிட்டிருந்தது.

ஜூலை 6ல் ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது அவர்களின் கவலைகளைஃஅழுத்தங்களை திருப்திப்படுத்த முயன்றதாகத் தெரிகிறது, ஆனால் அரசாங்கம் புதிய அரசியலமைப்பை ஆரம்பிக்கும்போது இந்த நிழல் அரசை முறியடிக்க முடியுமா என்பதை இன்னும் காணவேண்டியதாகவே உள்ளது.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைக்கு இது முன்பு எதிர்பார்த்த ஒரு தடை அல்ல. கூட்டு எதிhக்கட்சி அல்லது அரசாங்கத்தின் கூட்டணியில் உள்ள காலை வாரிவிடும் சில சந்தேகத்துக்குரிய பிரிவினரிடம் இருந்துதான் எதிர்ப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிக்காயாக்கள் இப்போது எதிர்பாராத ஒரு தடையாகத் தோன்றியுள்ளனர், ஒருவேளை இந்த அரசியலமைப்பு விவகாரம் தொடர்பாக தங்களிடம் முன்னரே கலந்தாலோசிக்கவில்லை என்று அவர்கள் ஆத்திரமடைந்திருக்கலாம்.

சங்கவின் முக்கியத்துவம்

பொதுமக்களின் வாழ்க்கையிலோ அல்லது பொதுமக்களின் எண்ணத்திலோ மகா சங்கம் ஒரு முக்கிய பிரிவு என்று ஏற்றுக்கொள்வதில் எந்தவித கேள்விக்கும் இடமில்லை. இது அவர்களின் மதப் பாத்திரத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. புத்தரின் காலத்தில் கூட, அவர் சமூக விடயங்களில் தiலையிட்டு வந்துள்ளார், ஆட்சியாளர்களுக்கு அவ்வப்போது நல்லறிவு உபதேசங்களை வழங்கினாரே தவிர அரசியலில் தலையீடு செலுத்தவில்லை. உண்மையில் அவர் ஆன்மீக வாழ்க்கையை தேடுவதற்காக அரசியல் அதிகாரத்தை கைவிட்ட ஒருவர். இன்றைய ஸ்ரீலங்காவில் அரசியலமைப்பின்படி பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப் பட்டுள்ளதுடன் மற்றும் அரசாங்கத்தின் கடமை பௌத்த சாசனத்தை பாதுகாப்பதும் மற்றும் வளர்ப்பதும் என்றுள்ளது அது வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் முன்று நிக்காயக்களுக்கம் மற்றும் அவர்களின் பீடாதிபதிகளுக்கும்  உள்ளடக்கமான ஒரு பங்கு இதில் உள்ளது. ஆனால் இது பௌத்த சாசனம் தொடர்பானதே தவிர அரசியல் தொடர்பானது அல்ல. சங்கம் இல்லாமல் சாசனம் இல்லை என்கின்ற போதும் இரண்டும் ஒன்றல்ல வெவ்வேறானவை.

இந்த நாட்டில் 30,000 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் உள்ளார்கள். இந்த நிக்காயக்களால் அவர்கள் வெவ்வேறு மட்டங்களில் திருநிலைப் படுத்தப் பட்டுள்ளார்கள். எனினும் பொதுவான சங்கத்தின் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களை மகாநாயக்க தேரர்கள் எவ்வளவு துரம் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறுபட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன, இது ஆரோக்கியமான ஜனநாயகமாக இருப்பதுடன் புத்தரின் போதனைகளுககும்(சுல்மா சுத்தா) ஒத்ததாக உள்ளன. ஜாதியை தவிர சங்காவுக்குள் பணக்கார சங்கம் மற்றும் ஏழை சங்கம் என்கிற தெளிவான வர்க்க பேதங்களும் உள்ளன. ஏழையான சங்கத்தினர் குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் நாளாந்த உயிர்வாழ்தலுக்கே போராட வேண்டி உள்ளதாக அச்சத்தை வெளியிடும் அதேவேளை பணக்கார கோவில்கள் அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்டத்தினரால் பரிபாலிக்கப் படுகின்றன.

பின்னர் இளைஞர்கள் மற்றும் வயோதிபர்களாக சுமார் 14 மில்லியன் பௌத்தர்கள் இந்த நாட்டில் உள்ளனர் மற்றும் இவர்கள் எவ்வளவு தூரத்துக்கு மகாநாயக்க தேரர்களின் அரசியல் மற்றும் அரசியலமைப்பு விடயங்கள் தொடர்பான ஆலோசனைகளைப் பின்பற்றுவார்கள் என்பது தெளிவில்லை. ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில், சாசனம் மற்றும் சாகா என்பன தாங்கள் உயிர்வாழ்வதற்கும் மற்றும் மதத்தை பரப்புவதற்கும் அரசாங்கம் அல்லது அரசர்களில் தங்கியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த ஆதரவு முக்கியமானது குறிப்பாக மற்றைய மதங்கள் மற்றும் மற்றைய ஆட்சியாளர்களிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்படும் போது. இது பெரும்பாலும் ஏனைய மதங்களுக்கும் பொதுவான ஒன்று. எனினும் இந்த ஆதரவைப் பெற்றவர்கள் அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்துவது மற்றும் கட்டுப்படுத்துவது என்பது கிட்டத்தட்ட எதிர்மாறான நிலைக்கு மாறிய காலங்களும் இருந்தன. கடந்த காலத்தின் ஒரு வரலாற்று உண்மையாக இதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் மக்களின் இறையாண்மை பற்றிய நவீன ஜனநாயக கொள்கைகள் மற்றும் சூழ்நிலைகளின் கீழ் இது பிரச்சினைகளை உருவாக்கலாம்.

மகா நாயக்க தேரர்களின் தலையீடு

தற்சமயம் ஸ்ரீலங்கா பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறது, மற்றும் அவை தனித்துவமானவை மற்றும் இந்த நாட்டுக்கு மட்டுமே உள்ளவை என்று ஒருவரால் கூற முடியாது. ஒரு சமய அல்ல தார்மீகக் கண்ணோட்டத்தில் மிகவும் எச்சரிக்கை தருவது அதிகரித்து வரும் குற்றங்கள், திருட்டுக்கள், சமூக வன்முறை, போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையாகுதல் மற்றும் ஊழல் என்பனவே, செல்வம் சம்பந்தமானவை மட்டுமல்ல ஆனால் நடத்தை மற்றும் மதிப்புகள் என்பனவும் இதற்கு காரணம். அநேக அரசியல்வாதிகள் இந்த சீரழிவின் மையத்தில் உள்ளார்கள். குறைந்தபட்சம் அதற்குப் பொறுப்பாக உள்ளார்கள். மகாநாயக்க தேரர்கள் இதில் தலையிட்டு அரசாங்கத்திலும் மற்றும் எதிர்க்கட்சியிலும் இந்த வழியில் உள்ள அரசியல்வாதிகளைக் கண்டனம் செய்வதுடன் இத்தகைய தீமைகளில் இருந்து விலகியிருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினால் அது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியலுக்கு தீங்கு விளைவிக்கும் தீமையான வெளிநாட்டுச் செல்வாக்கு அல்லது அழுத்தம் இருப்பதாக அதிகம் பரபரப்பான பேச்சுக்கள் உள்ளன. எனினும் பெரும்பாலும் கண்டனம் தெரிவிக்கப்படுவது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத தாக்கங்கள்; பற்றியே. சில தனித்துவமான தாக்கங்கள் அல்லது அழுத்தங்கள் நாட்டுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றால் நிச்சயமாக அவற்றை நிராகரிக்க வேண்டும் அல்லது பேச்சு வார்த்தைகளை நடத்தவேண்டும். இந்தச் சாத்தியங்கள் சர்வதேச விதிகள் மற்றும் விதிமுறைகளின் ஒரு பகுதியாகும். எங்கள் அரசியல் அறிஞர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு இதைச் செய்வதற்கான துணிவான முதுகெலும்பு இருக்கவேண்டும்.

பல்வேறு விதமான மற்றும் பல தாக்கங்களும் இணையத்தளங்கள், புத்தகங்கள், படங்கள் மற்றும் ஊடகங்கள் (குறிப்பாக சமூக ஊடகங்கள்) வழியாக இளம் தலைமுறையினரை கெடுப்பதற்காக நாட்டிற்குள் வருகின்றன, ஆனால் எங்கள் தேசப்பற்றாளர்கள் அதையிட்டு வாய்மூடி ஊமைகளாக உள்ளார்கள். அவுஸ்திரேலியாவைவிட ஸ்ரீலங்காவில் அதிகமான வயது வந்தவர்களுக்கான விடயங்கள் சுதந்திரமாக ஒளிபரப்பப்படுவதை நான் கண்டுள்ளேன். அநேக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வயது வந்தவர்களுக்கானது என்கிற வகைப்படுத்தல் இல்லாமல் உள்ளது மற்றும் அவற்றை பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் சேர்ந்து பார்க்கின்ற சாத்தியம் உள்ளது, அவர்கள் ஒருவேளை அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். பாலியலும் மற்றும் பொழுதுபோக்கும் மானிடர்களின் முதன்மைத் தேவையாகும், ஆனால் அவற்றின் திரிபுபடுத்தப்பட்ட வடிவங்கள் சமூக நெறிபிறழ்வு மற்றும் கடுமையான பாலியல் குற்றங்களுக்கும் வழி வகுக்கும். அத்தகைய குற்றங்கள் ஏற்கனவே காணப்படுகின்றன. மகாநாயக்க தேரர்கள் அத்தகைய விஷயங்களை அறியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு பின்னாலிருப்பவர்கள் அல்லது அவாகளுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் தேவையில்லாமல் அவர்களை அரசியலுக்குள் இழுத்துவிடுவதை தவிர்த்து, இத்தகைய விஷயங்களை அவர்களது கவனத்துக்கு கொண்டு வரலாம்.

மகாநாயக்க தேரர்கள் தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவராமல் புதிய அரசியலமைப்பை அல்லது தற்போதுள்ள அரசியலமைப்புக்கு திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை தங்கள் நிலைப்பாட்டுக்கு எந்தவித காரணமும் கூறாமல் எதிர்க்கிறார்கள். அரசியலமைப்பில் அவர்கள் நிபுணர்களா? என ஒருவர் ஆச்சரியப்படலாம். பௌத்தத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டால் அவர்கள் அக்கறை கொள்வதற்கு சரியான காரணம் உள்ளது. நீதித்துறையின் சுதந்திரம் அல்லது அதிகாரப்பரவல் முறை என்பனவற்றில் ஏதாவது பிரகாசமான யோசனைகளை அவர்கள் கொண்டிருந்தால் அதை அவர்கள் முன்பே வெளிப்படுத்தி இருக்கலாம். ஜனவரி 2016 இல் இருந்தே அரசியலமைப்பு தொடர்பான பொதுமக்கள் ஆலோசனையைப் பெறும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. ஒரு நகல் வரைவுக்குக் கூட காத்திருக்காமல் இந்தக் கட்டத்தில் புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பை வெளியிடுவது, முற்றிலும் அரசியல் செயற்பாடாகவே தோன்றுகிறது மற்றும் இது ஒரு மதம் சார்பான திட்டமாக இல்லை. ஆகவே அனைத்துப் பிரஜைகளுக்கும் இந்த விடயத்தில் அவர்களை விமர்சிப்பதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன.

மகாநாயக்க தேரர்கள் வேறு இரண்டு விடயங்களிலும் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்கள்: சயிட்டம் நெருக்கடி மற்றும் கட்டாய காணாமற் ஆக்கப்படுதலில் இருந்து அனைத்து நபர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் சர்வதேச மாநாட்டு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் மசோதா (ஐ.சி.பி.ஏ.பி.ஈ.டி) என்பன அந்த இரண்டு விடயங்களும். முதலாவது விடயமான சயிட்டம் நெருக்கடியை பொறுத்தவரை அதற்கு ஒரு தீர்வினைக் காண்பதற்காக மத்தியஸ்தம் செய்யும் நோக்கம் இருக்குமாயின் அல்லது விரைவில் அதைத் தீர்க்கும்படி அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கும் எண்ணம் இருந்தாலும் அது மதிப்பான ஒரு தலையீடாகவே கருதப்படும். கட்டாயமாக காணமல் ஆக்கப்பட்டோரின் மாநாட்டு விடயத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பதில் தெளிவில்லை, அரசாங்கம் ஏற்கனவே டிசம்பர் 2015ல் அதில் கையெழுத்திட்டுள்ளது. இந்த விடயம் மற்றொரு கட்சியின் சார்பாக சர்ச்சையை கிளப்புவதற்காக எழுப்பப் பட்டுள்ளது அல்லது வெறுமே இந்த மாநாடு ஒரு சர்வதேசம் சம்பந்தமானது என்பதற்காகக் கூறப்படுகிறது.

இந்த மூன்று நிலைப்பாடுகளையும் ஒன்றாக எடுத்து நோக்கும்போது, தெளிவாகத் தெரிவது ஜனநாயக முறைப்படி தெரிவான ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் என்பனவற்றை கீழறுத்து தற்போதுள்ள அரசாங்கத்துக்குப் பின்னால் ஒரு நிழல் அரசாங்கமாக செயற்படும் எண்ணத்துடன் மகாநாயக்க தேரர்கள் அரசியல் கோளத்துள் பிரவேசிக்கிறார்கள் என்பதுதான். மகாநாயக்க தேரர்களின் செல்வாக்கு அல்லது அவர்களால் பிரயோகிக்கப்படும் அழுத்தம் மிகவும் சக்தி வாய்ந்தது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஏற்கனவே ஜூலை 5ம்திகதிக்கு திட்டமிடப் பட்டிருந்த கட்டாய காணமற்போனவர்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டு மசோதாவின் இரண்டாவது வாசிப்பை திரும்பப் பெற்றுள்ளது அல்லது ஒத்திவைத்துள்ளது.

அஸ்கிரியவின் முந்தைய அறிவிப்பு

மகாநாயக்க தேரர்கள் வேலியின் தவறான பக்கத்தில் இருந்து அரசியலில் தோன்றுவது, சமீப காலங்களில் முதல் முறையாக ஜூன் 20ல் வெளியான அஸ்கிரிய அறிக்கை என்று குறிப்பிடப் படுவதில் இருந்தே. அது மிகவும் பிற்போக்குத் தனமானதாகவும் மற்றும் அரசியல் மயமானதாகவும் உள்ளது. அது “அரசாங்கத்துக்கு ஒரு கனிவான வேண்டுகோள்” என்று தலைப்பிடப் பட்டிருந்தது. அது முன்னுரையாக இரண்டு பத்திகளையும் மற்றும் கடினமான தாக்குதல் செயல்பாட்டைக் கொண்ட எட்டு பத்திகளையும் கொண்டிருந்தது. அது ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் போல அமைந்திருந்தது.

அது பின்வருமாறு ஆரம்பித்திருந்தது,”எங்கள் தாய்நாட்டுக்கும், சிங்கள தேசத்துக்கும் மற்றும் பௌத்த சாசனத்துக்கும் உள்ள பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் ஏற்பட்ட போதெல்லாம் பௌத்த பிக்குகள் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அரசியல் முனைகளால் பெருமளவு தூண்டப்பட்ட கற்பனைதான், எங்கள் தாய்நாட்டின் பாதுகாப்பு பற்றிய அச்சுறுத்தல் என்று பெரும்பாலும் பேசப்பட்டு வருகிறது. என்று தெரிவித்துள்ளதுடன் அது குறிப்பிடுவது எல்லாம், எங்கள் தாய்நாடு, சிங்கள தேசம் மற்றும் பௌத்த சாசனம் என்பன பற்றித்தான் பௌத்த தர்மம் பற்றி அதில் எதுவுமில்லை.

மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக அதில் ஒப்புக்கொள்ளப் பட்டிருப்பது கலகொட அத்தே ஞ}னசார தேரரின் சித்தாந்தத்தை, அதேவேளை அவரது உணாச்சி பூர்வமான நடத்தையை அது எற்றுக் கொள்ளவில்லை. இந்த விடயம் பற்றி அது சரியாகச் சொல்லியிருப்பது என்னவென்றால்: “கலகொட அத்தே ஞ}னசார தேரரின் உணர்ச்சி ரீதியான நடத்தையை அல்லது கருத்துக்களை வெளியிடும் பாணியையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாத போதிலும் அவரது சித்தாந்தத்தை புறந்தள்ளவில்லை” மதவாதத்தை புறமே தள்ளவில்லை என சிங்களத்தில் எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பு செய்தவர் மதவாதம் என்பதை கண்ணோட்டம் என்று மொழிபெயர்த்துள்ளார். எனது கருத்துப்படி அது அந்த அறிக்கைக்கு ஒரு மிதமான தோற்றத்தை கொடுப்பதற்காக வர்ணம் பூசப்பட்டது. எனினும் அரசியல் விஞ்ஞ}னத்தை கற்பித்த எனது அனுபவத்திலும் மற்றும் இன்னும் எனது புரிதலிலும் எனக்குத் தோன்றுவது மதவாதம் என்பது சித்தாந்தத்தை தவிர வேறொன்றுமில்லை என்றே.

நீங்கள் எந்த வழியில் வாதம் செய்தாலும், அஸ்கிரியவின் அறிவிப்பு, ஞ}னசாரதேரவின் கருத்துக்களுடன் சில இணக்கங்களைப் பிரகடனப் படுத்துகிறது மற்றும் குறைந்தது அதை நான் சிந்தனை முறை என்று சொல்வேன். அது அவருக்கு சொந்தமானது மட்டுமல்ல ஆனால் பொது பல சேனா மற்றும் அதேபோன்ற இதர அமைப்புகளுக்கும் சொந்தமானது. இதைத்தான் சரியோ அல்லது தவறோ, சிலர் இன – மத – பாசிசம் என அடையாளம் கண்டுள்ளனர்(தயான் ஜயதிலகா).

அந்த அறிக்கை மேலும் இடதுசாரிகள், தாராண்மைவாத அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் வேவை அமைப்புகளையும் கூடத் தாக்குகிறது. அது முற்றிலும் அரசியல் மயமானது. பௌத்த துறவிகளை விமர்சனம் (அரசியல்) செய்வதற்கு எதிராக மிகப் பெரிய பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது, ’மரியாதையின்றி அவர்களை பெயர் சொல்லிப் பேசுவது’ என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த பிக்குகளின் உணர்ச்சியோ அல்லது  அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களோ எவ்வளவு அருவருப்பானதாக இருந்தாலும யாராவது அப்படிச் செய்வதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களும் கூட தயவாக ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும், துறவிகள் சர்ச்சையானதும் மற்றும் மாறாக சேறு நிறைந்த அரசியலில் ஈடுபட்டால் பின்னர் அவர்களும் எதிர் விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும்.

அவசியமானது என்ன?

அவசியமானது என்னவென்றால் எனது கருத்துப்படி, பௌத்த துறவிகள் மற்றும் ஏனைய குருமார்கள், பிஷப்புகள் மற்றும் சமய குருமார்கள் சாச்சைக்குரிய அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும். அவர்கள் சமூக, மத மற்றும் தார்மீகநெறி முறைகள் பற்றி அக்கறைகளை வெளிப்படுத்தலாம். நிச்சயமாக அஸ்கிரியவின் அறிக்கையில், வரலாற்று சிறப்பு மிக்க பௌத்த புனித நகரங்கள், 2002ல் பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையில் அடையாளம் காணப்பட்டவைகள் கூட  சிதைவடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது போன்ற சில பெறுமதியான விஷயங்கள் பற்றி அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. நான் என்னுடைய முந்தைய கட்டுரையில் முக்கியமாக குறிப்பிட்டிருந்ததைப் போல, இதைக் கவனிப்பது பௌத்த சாசன அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதே நேரம் இவாஞ்சலிகன் மதக் குழுவினரால் ஒழுங்கீனமான மதமாற்றங்கள் இடம் பெறுமாயின் அவை நிறுத்தப்பட வேண்டும். எனினும் அவர்கள்மீது மேற்கொள்ளப்படும் உடல் ரீதியான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. இந்த விடயங்களில் சில, மதங்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தீர்த்து வைக்கப் படுவதுதான் சிறந்தது, இதுபற்றி சில காலங்களுக்கு முன்னர் நான் பரிந்துரை செய்திருந்தேன்.

எனது பிரதான கவலை அஸ்கிரிய அறிக்கை பொது பல சேனாவின் சித்தாந்தை  அல்லது ஞ}னசாரவின் சிந்தாந்தம் என்று நான் சொல்லுவதை அங்கீகரிப்பதாக உள்ளதுதான். முன்னர் நான் இந்தப் பிரச்சினையை எழுப்பியபோது, ஒரு விமர்சகர் என்னிடம் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை கைது செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா என்று பகிரங்கமாகவே கேட்டார், யாரையும் கைது செய்யவேண்டும் என்பது எனது பிரதான அக்கறை அல்ல. எனது அக்கறையெல்லாம் சிறிது சிறிதாக விரிவடைந்து வரும் பிற்போக்குத்தனமான தேசியவாத சித்தாந்தத்தைப் பற்றித்தான். ஒருவேளை இந்த சித்தாந்தம்தான் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களையும் மற்றும் ஏனைய மத குருமார்களையும் அரசியலுக்கு இழுத்து வருகிறதோ. மிகவும் கவலையளிப்பது எதுவென்றால் மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திற்கு பின்னால் ஒரு அரசாங்கமாகத் தோன்றி ஜனநாயகமற்ற முறையில் விடயங்களைக் கட்டாயப்படுத்துவதுதான்.

நீண்ட காலமாக நான் பௌத்த மதத்தை பாராட்டியும் மற்றும் எழுதியும் வருகிறேன். சிந்தனையில் அநேகமாக நான் ஒரு பௌத்தன், ஆனால் மலிவான அரசியல் இலாபங்கள், அரசியல் திட்டங்கள் அல்லது பிரபல்யம் தேடும் ஒரு சிங்கள பௌத்தன் அல்ல. நான் தேரவாதம் மற்றும் மகாயான ஆகிய இரண்டுக்கும் மற்றும் ஏனைய பௌத்த மரபுகளுக்கும் திறந்தவனாகவே உள்ளேன். ஏனைய மதங்களில் நான் சமமாகப் பாராட்டும் நல்ல நீதி நெறிமுறைகளைத் தவிர, அதிகமான தத்துவங்களை (அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய தத்துவங்களை) நான் காணவில்லை. பௌத்தம் ஒரு தத்துவம், இந்த சிக்கலான உலகத்துக்கு வழங்குவதற்கு அதனிடம் ஏராளமானவை உள்ளன, ஸ்ரீலங்காவுக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்குமே பெருமளவு மெய்யியல் அறிவை அதனால் வழங்க முடியும். மற்ற மதங்களுக்கும் மற்றும் சமூகங்களுக்கும் பாரபட்சமான முறையில் மகாநாயக்க தேரர்கள் அரசியலில் தலையீடு செய்தாலோ அல்லது அரசாங்கத்துக்குப் பின்னால் மற்றொரு அரசாங்கமாக இயங்க முயற்சித்தாலோ அந்தக் காரணத்திற்கு பெரும் சேதம் ஏற்படும்

லக்சிறி பெர்ணாண்டோ

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்