varatharவடமாகாணசபை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த சபையாக செயற்பட்டு உலகத்திற்கு வெளி வந்திருப்பது வெட்கக் கேடானது. முதலமைச்சர் தன்ணனடைய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்துகிறார்.
அமைச்சர்கள் ஏனைய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள். அவர்களுடைய கட்சியின் தலைமைக்கெதிராக அவர்களே பிரசாரம் செய்கிறார்கள். கட்சியின் தலைமை தன்னுடைய உறுப்பினர்களுக்கெதிராகப் பிரசாரம் செய்கிறது. இவ்வாறானவர்கள் எவ்வாறு மக்களுக்குச் சேவை செய்ய போகிறார்கள்? இவ்வாறவனர்களை நம்பி வாக்களித்த எமது மக்களின் கதி என்ன? என வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் கவலை வெளியிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ் நல்லுர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
வடக்கு மாகாண சபை உருவாகும் போது எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருந்தார்கள். ஒரு பெரும் யுத்த அழிவுகளுக்குப் பின்னர் உருவான வடக்கு மாகாண சபை மக்களின் விடிவுக்காக உழைக்கும் என்ற எதிர்பர்ப்பு எமது மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் இன்று வடமாகாண சபை மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவ்வாறான வடக்கு மாகாண சபை தேவைதானா என்று மக்கள் எண்ண ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாண மக்கள், வடக்கு மாகாண மக்கள் மாத்திரமின்றி உலகம் முழுவதும் பரந்து வாழும் மக்கள் மத்தியிலும் இந்த எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் மக்களுக்கு நன்மை செய்வோம் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த மாகாண சபை எமது மக்களுக்கு நன்மை எதுவும் செய்யாதது மாத்திரமன்றி தங்களுக்குள்ளும் சண்டையிட்டுக் கொள்கிறது எனவும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நன்றி- யாழ் தினக்குரல், காலைக்கதிர் (19.08.2017)