karnakaran-noolஇது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் உருவாக்க வேண்டிய காலமாகும். ஆனால், இதற்குப் பதிலாக நல்லிணக்கம் பற்றியும் நல்லுறவைப் பற்றியும் பேசப்படுகிறதே தவிர, ஆக்கபுர்வமாக அவற்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஆக்கபுர்வமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால், தற்போது உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு இவ்வளவு எதிர்ப்புகளும் குழப்பங்களும் வருவதற்கான நியாயமே இல்லை. ஆகவே குறைபாடான முறையிலேயே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அல்லது ஆத்மபூர்வமாகச் செய்வதற்குப் பதிலாக ஒப்புக்குச் செய்யப்படுகின்றன.

உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்களிடமுள்ள மனக்குறையை நீக்கும் வகையில் அதிகாரங்களைக் கூடுதலாக வழங்குவதற்கு சிங்களத் தரப்பு முன்வந்திருக்க வேணும். பௌத்த பீடங்கள் இதில் முன்மாதிரியான வரலாற்றுப் பணியையும் பங்களிப்பையும் செய்ய வேண்டியது அவசியம். “இதோ உங்களுக்கு அதிகமாகவே தருகிறோம்” என்ற வார்த்தையை இவை சொல்லியிருந்தால், அதுவே ஆகச் சிறந்த நல்லிணக்கமாகும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இருப்பதையும் விடக் குறைவாகவே கொடுக்க வேண்டும் என்று கூறும்போக்கே சிங்களத்தரப்பிடம் உள்ளது. இந்த நிலையில் நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசுவது நகைப்பிற்கிடமானது.

ஆனால், இதற்கு அப்பாலும் நாம் நல்லிணக்கம் பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டும். ஏனென்றால், இலங்கையின் அரசியல் யதார்த்தம் அது. அரசியல் மெய்ப்பாடும் அதுவே. எனவேதான் தமிழ் – முஸ்லிம் உறவைப் பற்றியும் ஒட்டு மொத்தமாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றியும் பேசுகின்ற காலமாக இந்தக் காலகட்டம் உள்ளது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப்போல, இதற்காகப் பல செயலணிகளும் செயலகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கான செயலணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க  தலைமைப் பொறுப்பேற்றிருக்கிறார். நாட்டின் புத்திஜீவிகள் பலரோடு சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் இணைந்து நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இதற்காகப் பல கோடி ரூபாய் பணமும் நிறைய வளங்களும் செலவழிக்கப்படுகிறது.

இலங்கையில் சமாதானத்தை உருவாக்குவதற்காக ஒரு காலம் வெளிநாடுகள் பணத்தை வாரியிறைத்ததைப்போல, இப்போது நல்லிணக்க முயற்சிகளுக்காகப் பணத்தை இதே நாடுகள் வாரிக் கொடுக்கின்றன. நல்லிணக்கம் வளர்ந்து  செழிக்கிறதோ இல்லையோ இதிற் பலர் கொழுக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

இவ்வாறு செயற்கையாக உருவாக்க முயற்சிக்கப்படும் “நல்லிணக்கப் பயிர்” வளருமோ செழிக்குமோ பயன்தருமோ தெரியாது. அல்லது இறைக்கப்படும் பணம் நிறுத்தப்படும்போது அப்படியே இந்த நல்லிணக்கச் செடி கருகி விடவும் கூடும். ஆத்மாவைத் திறந்து மனப்பூர்வமாகச் செய்யப்படாத எந்தக் காரியத்துக்கும் வரலாற்று மதிப்பு ஏற்படுவதில்லை. அவை உரிய பயனை மானுட சமூகத்துக்குக் கொடுப்பதும் இல்லை.

தற்போது முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் சுலோகங்களும் இறைக்கப்படும் பணமும் இல்லாமலே நல்லிணக்கத்தையும் இன ஐக்கியத்தையும் தன்னுடைய செயற்பாடுகளின் மூலமாகக் கொண்டிருந்தவர் சுவாமி விபுலாநந்தர். ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பணிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக அவர் யாரிடமும் பணம் பெற்றதில்லை. செயலணிகளை உருவாக்கியதில்லை. யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் இயங்கியதில்லை. தன்னுடைய ஆன்மாவின் வழிப்படுத்தலில் அவர் எல்லோரையும் நேசித்ததன் விளைவாக நல்லிணக்க நடைமுறையைப் பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்தினார்.  இதனால் எல்லோரும் அவருக்குச் சமனாகவே தோன்றினர். அனைவரையும் சமமாக நேசிக்கும்போது நமக்கு வேறுபாடுகள் தெரியாது. அதுவே ஆகச் சிறந்த நல்லிணக்கத்தின் அடிப்படைக் கூறாகும்.

விபுலாநந்தரின் ஆன்மா எப்படி அவ்வாறு இயங்கியது? இதுவே நாம் கண்டறிய வேண்டியது. இதற்கு அவருடைய வாழ்க்கையும் நோக்கும் முக்கியமானதாகும். இதை இலகுவாக நாம் அறிந்து கொள்வதற்கு BBC யில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகனின் வழிப்படுத்தலில் அவருடைய மகன் ரகுலன் சீவகன் உருவாக்கியிருக்கும் “சுவாமி விபுலாநந்தர்” என்ற ஆவணப்படம் உதவுகிறது. இதை லண்டனில் இயங்கி வரும் “அரங்கம்” என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தை விபுலாநந்தருடைய 125 ஆவது பிறந்த தினத்தையொட்டி, கடந்த 20.07.2017 அன்று மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில் முன்றலில் வைத்து அரங்கம் அமைப்பு வெளியிடப்பட்டபோது, இதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்தப் படத்தில் விபுலாநந்தரின் வாழ்க்கையும் பணிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைய நிலையிலிருந்து நோக்கும்போது, தான் வாழ்ந்த காலத்திலே, தன்னைச் சூழவுள்ள சமூகங்களின் அக, புற வளர்ச்சியில் விபுலாநந்தர் கொண்டிருந்த தெளிவான சிந்தனையையும் அதற்கான செயற்பாடுகளையும் துலக்கமாக அறிய முடிகிறது. கூடவே இன நல்லுறவையும். சமநிலை நோக்கோடு பணி செய்யும்போது இது வெற்றியளிக்கும் என்பதே விபுலாநந்தர் கொண்டிருந்த நம்பிக்கையாகும். அதுவே அவருடைய வழிமுறையும் கூட.

விபுலாநந்தர் பிறந்து வளர்ந்தது கிழக்கு மாகாணத்திலுள்ள காரைதீவில். காரைதீவு மட்டக்களப்புக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் குடிசன இருப்பானது முஸ்லிம்களும் தமிழ் மக்களும் அக்கம் பக்கமாக வாழ்வதைக் கொண்டது. காரைதீவுக்கு அடுத்ததாக உள்ள பாலமுனை, நிந்தவுர் போன்ற இடங்கள் முஸ்லிம்களை அதிகமாகக் கொண்டவை. இப்படி அமைந்த பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த விபுலாநந்தர், இயல்பாகவே எல்லாச் சமூகத்தினரோடும் இணைந்து வாழ்க்கின்ற அனுபவத்தைக் கொண்டிருந்தார்.

“விபுலானந்தரின் இளமைக்கால வாழ்க்கையும் மட்டக்களப்புச் சூழலும் இராமகிருஷ்ண மடத் தொடர்பும் வேதாந்த ஞானமும் அவருக்கு சமூகப் பிரிவினைகளுக்கு எதிரான நோக்கையே கொடுத்தன” என்று பேராசிரியர் சி. மௌனகுரு கூறுவதை இங்கே கவனிக்க வேண்டும். தன்னை விரித்துக் கொள்வதற்கு இந்த அனுபவங்கள் அறிவாக விபுலாநந்தருக்கு வாய்த்தன. இதனால், அவர் செயற்பட்ட இடங்களில் எல்லாம் அனைத்துச் சமூகத்தினரையும்  சமநிலையில் வைத்து நோக்கும் இயல்பினைக் கொண்டிருந்தார். அதுவே அவடைய செயல்முறையாகவும் இருந்தது. இதனால்தான் விபுலாநந்தரை முஸ்லிம்களும் உயர்வாக மதித்துப் போற்றுகின்றனர். கிழக்கில் தமிழர்களிடத்திலே விபுலாநந்தருக்கு அளிக்கப்படும் மதிப்பின் அளவுக்கு முஸ்லிம்களிடத்திலும் மதிப்புண்டு. இன்று நல்லிணக்கத்தைப் பற்றிச் சிந்திப்போரும் பேசுவோரும் இதற்காகச் செயற்படுவோரும் விபுலாநந்தரை ஆராய்ந்தறிவது அவசியம். குறைந்த பட்சம் அரங்கம் தயாரித்துள்ள விபுலாநந்தரைப் பற்றிய ஆவணப்படத்தையாவது பார்த்துத் தெளிந்து கொள்ளலாம்.

இந்த ஆவணப்பட முயற்சி விபுலாநந்தரின் 125 ஆவது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டிருந்தாலும் இது இந்தக் காலகட்டத்துக்குரியவாறு மிகப் பொருந்துகிறது. இது திட்டமிடப்பட்டதோ இல்லையோ தெரியாது. ஆனால், இயல்பாகவே விபுலாநந்தரைப் பற்றிய சேதிகள் பகிரப்படும்போது இன்றைய காலத்தேவைக்குரியதாக இது அமைந்துள்ளது என்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஒரு ஆக்கப்படைப்பின் வெற்றி இதுவெனலாம். சிறந்த நோக்கங்களின் அடிப்படை எப்போதும் இப்படி இருப்பதுண்டு.

விபுலாநந்ததைப்போல இலங்கைச் சமூகங்கள் அனைத்திலும் பல ஆளுமைகள் பன்முகத்தன்மையோடும் நல்லிணக்கச் சிந்தனையோடும் செயற்பட்டிருக்கிறார்கள். இதனால், அவர்களுடைய பங்களிப்புகள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்துள்ளன. நாட்டுக்குப் பயனுடையதாக இருந்தது. இன்னும் அந்தப் பயனை நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டையும் மக்களையும் வாழ்க்கையையும் மெய்யாக நேசித்ததன் விளைவே இது. தங்களை மையப்படுத்திச் சிந்திக்காமல், சமூகத்தை முன்னிறுத்திச் சிந்தித்ததன் விளைவாகவே அவர்கள் இப்படியான நல் விளைச்சல்களைத் தரக்கூடியதாக இருந்தது. மட்டுமல்ல, தீங்கை உண்டாக்கவேயில்லை.

ஆனால், இன்றைய அரசியல்வாதிகளும் தலைவர்களும் புத்திஜீவிகளும் மதத்தலைவர்களும் மத நிறுவனங்களும் எப்படி இருக்கின்றன. நம் முன்னோடிகளுக்கும் வழிகாட்டிகளுக்கும் மாறாக – எதிராக இயங்குவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதை விட இந்தச் சக்திகளுக்கு இடமளிக்கிறோம். இவற்றைத் தெரிந்தும் தெரியாமலும் நாமே ஆதரவளித்துப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கின்ற அமைப்புகளை ஆதரித்து, இவற்றுக்கான அதிகாரத்தைக் கொடுத்தது யார்? நாங்கள்தானே. ஆகவே அழிவுக்கும் சீர்குலைவுகளுக்கும் நாமே இடமளித்திருக்கிறோம்.

இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். தவறுகள் நிகழ்வதுண்டு. அந்தத் தவறுகளை நாமே விட்டுமிருக்கலாம். ஆனால், அவை தவறுகள் என்று தெரிந்து கொண்டே தொடர்ந்தும் இடமளிப்பது மிகத் தவறானது. ஆகவேதான், நாம் முதலில் நாம் விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். விபுலாநந்தர் போன்ற ஆளுமைகள், மேதமைகள் எமக்குச் சொல்லும் ஆழமான உண்மைகளை நாம் கண்டறியும்போது, நாம் செயற்படவேண்டிய விதங்களைக் குறித்த சிந்தனையும் துணிவும் நமக்குக் கிடைக்கின்றது.

படிப்பு, பட்டம், பதவி, அதிகாரம், வாய்ப்புகள், வசதிகள் என எல்லாமே கிடைத்திருந்தாலும் அவற்றையெல்லாம் தனக்குரியவை என்றாக்கிக் கொள்ளாமல், அவற்றைச் சமூகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள விளைந்த சிந்தனை உயரியது. அது ஒரு பெரிய விழுமியச் செயற்பாடு. ஒரு செயலைச் செய்யும்போது எத்தகைய சலனங்களுக்குள்ளும் சிக்கிவிடக்கூடாது என்ற மன ஓர்மத்துடன் செய்தால், அதற்கான பயனைப் பெற முடியும் என்பதே விபுலாநந்தரின் சேதி. இலங்கையின் இன்றைய அரசியல் நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்வதற்குத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டிய படிப்பினைகளை விபுலாநந்தரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

விபுலாநந்தரின் காலம் பிரித்தானிய ஆட்சி இலங்கையில் இருந்த காலகட்டமாகும். பிரித்தானியருக்கெதிரான சுதந்திரப் போராட்டம் இந்தியாவில் எழுச்சியடைந்திருந்தது. இலங்கையிலும் அதனுடைய அருட்டுணர்விருந்தது. ஆனால், விபுலாநந்தர் ஒரு போதுமே அரசியலைப் பேசியதோ, அரசியலை நேரடியாகக் கவனித்ததோ அதிலே ஈடுபாடு கொண்டிருந்ததோ இல்லை. அவருடைய காலத்தில் காந்தியின் சுதந்திரப்போராட்டம், பாரதியாரின் விடுதலைக் கவிதைகள் எல்லாம் தமிழ் நாட்டில் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. அப்போது – 1930 களில் – இந்தியாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார் விபுலாநந்தர். ஆனாலும் விபுலாநந்தரின் கவனம் நேரடி அரசியலில் ஈடுபாடு கொள்ளவில்லை. இது வியப்பளிக்கும் செய்தியே. சுற்றிவர அரசியல் புயலடித்துக் கொண்டிருக்கும்போது அதற்குள் சிக்கிவிடாதிருந்த அவருடைய மன அமைப்பு எத்தகையது என்ற கேள்விகள் எழுகின்றன. அதேவேளை அவர் திட்டமிட்டிருந்த ஆய்வுப்பணிகளைத் திறம்படச் செய்தார். அவர் அன்றைய நிலையில் அவசியப்பட்ட மொழி சார்ந்தும் இலக்கியம் மற்றும் கலை சார்ந்தும் செயற்பட வேண்டிய துறைகளில் ஈடுபாடு காட்டினார். அந்நியர் ஆதிக்கத்துக்கெதிரான அடையாளப் பேணுகையும் மீளமைப்பும் அதுவாகும். ஆகவே அதுவும் ஒரு அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டதே. ஆனால், அதை அவர் வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தவில்லை.

இதனால்தான் அவர் நிலைமாறும் அரசியலுக்கு அப்பால், நிலைமாறாத பெரும் செல்வமாகிய கல்வியையும் இலக்கியத்தையும் – யாழ் நூலைப் பரிசளித்தார். “ வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ, வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ!  வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்ற வரிகள் காலத்தினால் அழியாத வரம் பெற்றவை. அந்தக் காலப் பரிசையே இங்கும் நான் மொழிகிறேன். விபுலாநந்தரின் பணிகள் வடக்கு, கிழக்கு, கொழும்பு எனப் பரந்து அமைந்திருந்தன. அவர் காலத்தில் இயங்கிய நாவலரைப்போன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேல் நிலைச்சிந்தனைக்குள் சிக்கிவிடாமல், பொதுநிலைப்பட்டுச் சிந்ததைப்போல, இன்றைய செயற்பாட்டாளுமைகளும் சிந்திக்க வேண்டும். அதையே காலம் எதிர்பார்த்துள்ளது.

கருணாகரன்