578127157Typhoon-Talim-2இலங்கைக்கு 1700 கிலோமீற்றர் தொலைவில் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் தற்போது குறைந்த காற்றழுத்த வலயம் ஒன்று உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாழமுக்க வலயம் எதிர்வரும் நாட்களில் மேம்பட்டு மத்திய வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தை கடந்து இந்திய துணைக்கண்டத்துக்குள் நுழையும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, குறைந்த காற்றழுத்த வலயமானது எதிர்வரும் 5 அல்லது 6 ஆம் திகதிகளில் இலங்கையின் ஊடாக மேற்கு திசையில் செல்ல உள்ளதால் அது வலுவடைந்து புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வளிமண்டலத்தின் தன்மை மாறுபடும் நிலைமைக்கேற்ப அதன் பயணப் பாதை மாறுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழமுக்க நிலைமையின் நகர்வு மற்றும் தன்மை குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த காற்றழுத்தம் புயலாக மாறுமிடத்து இலங்கை மற்றும் தமிழகத்தின் கரையோரப்பகுதிகளுக்கு கடுமையான சேதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒக்ஹி சூறாவளியால் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் பலியாகியுள்ளதுடன் 5 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதுடன் 61 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வடுக்களை ஏற்படுத்திய ஒக்ஹி (OCKHI) சூறாவளியானது தற்பொழுது நாட்டின் மேற்குத்திசையான கொழும்பிலிருந்து 850 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கையை மற்றுமொரு புயல் தாக்க கூடிய சாத்திய கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது