பல வருடங்களாக யாழ்ப்பாண மக்கள் குடிநீர் பிரச்சினையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இரணைமடு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு நீர்கொண்டு செல்லும் முயற்சி தடைப்பட்டுள்ளதால் இது தொடர்பில் வேறு திட்டங்களினூடாக நீர்வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என ஒன்றிணைந்த எதிரணி தலைவர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

யாழ். நகருக்கான கழிவுப் பொருள் அகற்றும் கருத்திட்டம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா எம்.பி. எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதில் வழங்கினார். இதன்போது இடையீட்டு கேள்வி ஒன்றை எழுப்பிய போதே தினேஷ் குணவர்தன எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இரணைமடுவினூடாக யாழ்ப்பாணத்திற்கு நீர்கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை தடைப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நீர் வழங்குவதற்கு புதிய திட்டங்கள் ஏதாவது ஆரம்பிக்கப்படுமா? மழைநீர் சேமிப்பினூடாகவோ நீர்வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? பல வருடங்களாக அந்த மக்கள் நீர் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்; தினேஷ் குணவர்தன எம்.பியின் அக்கறையை பாராட்டுகிறேன். கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது. இதனால் இரணைமடு நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு அரசியல் ரீதியான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனால் பல மாற்று வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீர் தொடர்பான இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.coldinesh-gunawardena173709091_5719548_30112017_SSS_CMY