vpஅண்ணாமலை வரதராஜப் பெருமாள், இப்போது பிரிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்து இருந்தபோது முதலாவதும் ஒரே முதலமைச்சராகவும் இருந்தார். அவர் சிலோன் ருடேக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் இந்த நேரத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை இருக்கவேண்டியது மிகவும் அவசியம் எனத் தெரிவித்தார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) இணை நிறுவனர்களில் ஒருவரான வரதராஜப்பெருமாள் மேலும் தெரிவித்தது, ரி.என்.ஏ யிலிருந்து ஈபிஆர்எல்எப் இனது தலைவர்               சுரேஸ் கே.பிரேமச்சந்திரனின் வெளியேற்றம் அந்தக் கூட்டணியைப் பாதிக்காது என்று.

அந்த நேர்காணலின் சில பகுதிகள்:

  • கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கரம் கோர்ப்பதற்கு உங்களை உண்மையில் ஊக்கப் படுத்தியது எது?

பதில்: ஒரு இளைஞனாக 1970 களில் நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (பெடரல் கட்சி) அரசியல் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தேன். தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர் என்கிற வகையில் பல முறை கைது கூடச் செய்யப்பட்டிருக்கிறேன். அந்த நேரத்தில் பல இளைஞர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தமிழரசுக் கட்சி ஒரு மேடையாக இருந்து வந்தது. இன்று தமிழ் அரசியல் பல்வேறு கட்டங்களாக பரிணாமம் அடைந்துள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் அவை போராளிகளினதோ அல்லது மிதவாதிகளினதோ எதுவாக இருப்பினும் அவற்றின் இடையே ஒற்றுமை இல்லாதிருப்பது வேதனை அளிக்கிறது. எங்கள் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான பல நல்ல வாய்ப்புகளை நாங்கள் இழந்துள்ளோம். 80 களின் நடுப்பகுதியில் எங்கள் இனப்பிரச்சினை ஆரம்பமான காலத்தில் அது சர்வதேச கவனத்தை ஈர்த்தது, இந்தியாவில் தொடங்கி அநேக நாடுகள் ஒரு இணக்கமான தீர்வினைக் காண்பதற்காக எங்களுக்கு உதவி செய்ய முன்வந்தன. எனினும் அந்த நல்ல வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டதினால், இன்றைய புதிய அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் தமது நம்பிக்கையை ரி.என்.ஏ மீதுதான் வைத்துள்ளார்கள். ரி.என்.ஏ, முன்னாள் போராளிகள் அமைப்பு மற்றும் மிதவாதிகள் ஆகியோரைக் கொண்ட ஒரு கலவையாக இருப்பதால், எங்கள் பிரச்சினைகளுக்கான வழிகள் மற்றும் வழிமுறைகளைக் காண்பதற்கு இந்தக் கூட்டு ஒரு விவேகமானதாக அமையலாம் என்று நான் எண்ணுகிறேன்.

  • கேள்வி: ரி.என்.ஏ யின் தற்போதைய நிலையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

பதில்: ரி.என்.ஏ மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான ஆர். சம்பந்தன் தொலை நோக்கம் கொண்ட ஒரு நல்ல தலைவராக உள்ளார்.  வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள சரியாகச் சிந்திக்கும் அமைதியான பெரும்பான்மையினர் அதேபோல எங்கள் அரசியல் பிரச்சினை பற்றிய கரிசனையுள்ள சர்வதேச சமூகம் என்பன கூட, சம்பந்தன் மட்டும்தான் தமிழர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள தலைமையை வழங்கமுடியும் என நம்புகிறார்கள். அவர் ரி.என்.ஏ யின் தலைவராக வந்தது முதல் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் யாவற்றையும் அவர் ராஜதந்திர ரீதியிலும் மற்றும் சாதுரியமாகவும் கையாண்டு வருகிறார். ஆகவே தென்பகுதியில் உள்ளவர்கள் அவரது நிலைப்பாட்டை தமிழ் அரசியலில் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒன்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

  • கேள்வி: ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் கே.பிரேமச்சந்திரனுக்கும் மற்றும் ரி.என்.ஏ உயர் மட்டத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் கே.பிரேமச்சந்திரன் ரி.என்.ஏ யிலிருந்து வெளியேறுவது அந்த கூட்டணியைச் சேதப்படுத்தாது. அவரது கட்சியின் பல அங்கத்தவர்கள் ரி.என்.ஏ யிலேயே தொடர்ந்து இருக்கவேண்டும் என்கிற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு கைப்பிடியளவு ஆதரவாளர்களே சுரேஸ் பிரேமச்சந்திரன் பக்கம் உள்ளார்கள். அவருக்கு அரசியலில் முறையான அடித்தளம் கிடையாது. சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ரி.என்.ஏ க்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் கூட்டணி மற்றொரு நகைச்சுவை. இந்தக் கட்டத்தில் தமிழ் அரசியலில் மேற்கொள்ளப்படும் பிளவுகள் மற்றும் பிரிவினைகள் ஆக்கபூர்வமான எதையும் உருவாக்கப் போவதில்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

  • கேள்வி: தமிழ் மக்கள் பேரவையின் (ரி.பி.சி) உருவாக்கம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: ஆரம்பம் முதலே தமிழ் மக்கள் பேரவை ஒரு சிவில் சமூக அமைப்பாகவே அடையாளம் காணப்பட்டு வந்ததுடன் மற்றும் தமிழ் அரசியல் காட்சியில் தனது அவதானங்களை உருவாக்குவதில் அழுத்தம் கொடுக்கும் ஒரு குழுவாகவுமே தன்னை அடையாளம் கண்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஒரு பகுதியாக இருக்கும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு போட்டி அமைப்பாக ரி.பி.சி உருவாக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார். எனவே வாழ்க்கையின் அனைத்துப் பிரிவுகளிலுமுள்ள மக்களின் கருத்துக்களை வெளிக் கொணருவதில் ரி.பி.சி ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கலாம். ஆகவே ஒரு அரசியல் அமைப்பாக அது ரி.என்.ஏக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்காது.

  • கேள்வி: இணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முதலாவது முதலமைச்சராக இருந்த வகையில் இந்த இரண்டு மாகாணங்களினதும் மாகாண ஆட்சியின் தற்போதைய நிலமையை நீங்கள் எப்படிக் காண்கிறீர்கள்?

பதில்: அதை ஒரு தோல்வி என்றுதான் நான் கூறுவேன். முதலாவதாக வட மாகாணசபை அதன் நிருவாகத்தில் மிகவும் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. ஊழல். மற்றும் தவறான நிருவாகம் காரணமாக பல வடமாகாணசபை உறுப்பினர்கள் அவர்களின் பதவியில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்கள். தனது அமைச்சர்களின் ஊழல் போக்கினை முதலமைச்சா விக்னேஸ்வரனே கூட ஏற்றுக் கொண்டுள்ளார். அதன் ஆரம்பம் முதற்கொண்டே வட மாகாணசபை அபிவிருத்தியை நோக்கிய பணிகள் எதையும் மேற்கொண்டதே அரிது. வட மாகாணசபையின் எதிர்க்கட்சி வட மாகாணத்தின் அபிவிருத்தியில் உள்ள குறைபாடுகள் பற்றி வெகு தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலத்தைப் போலில்லாமல் வெளிநாட்டு கண்டுபிடிப்புகள் அதேபோல தமிழ் புலம் பெயர்ந்தவர்களிடம் இருந்து நிதி உதவிகளைப் பெறுவதற்கு எங்களுக்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் வட மாகாணசபை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசத்துக்கு பரந்த பார்வையுடன் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆக்கபூர்வமான எதையும் செய்யவில்லை. இதே நிலமைதான் கிழக்கிலும் நிலவுவதை என்னால் காணமுடிகிறது.

வியட்னாம் போன்ற மற்ற நாடுகளின் யுத்தத்துக்குப் பின்னான பொருளாதார வளர்ச்சி அளப்பரியது. மிகவும் அற்புதமான விதத்தில் வியட்னாம் தன்னை முன்னேற்றியுள்ளது. பனிப்போரின் முடிவினைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தத்தையும் மற்றும் உள்ளக மோதல்களையும் எதிர்கொண்ட பால்கன் நாடுகள் குறிப்பிடத்தக்க முறையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை இணைந்த வடக்கு மற்றும் கிழக்கின் முதல் முதலமைச்சராக நான் இருந்தபோது, மூன்று சமூகங்களையும் சேர்ந்தவர்கள் மாகாணசபை அங்கத்தவர்களாக இருந்தார்கள். துரதிருஷ்டவசமாக காலஞ்சென்ற ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ தலைமையில் எல்.ரீ.ரீ.ஈ யினால் எங்கள் ஆட்சிக்கு மேற்கொள்ளப்பட்ட தடைகளினால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவே வட மாகாணசபை மற்றும் கிழக்கு மாகாணசபை ஆகிய இரண்டு மாகாணசபைகளும் இரண்டு மாகாணங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு பொருளாதார ரீதியில் எதையும் செய்யவில்லை.

  • கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: நல்லது, இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் அரசியலமைப்பின் 13வது திருத்தம் என்பன வடக்கு மற்றும் கிழக்கு இணைப்புக்கான வழியை திறந்துவிட்டது. துரதிருஷ்டவசமாக இந்த இரண்டு மாகாணங்களின் இணைப்பும் ஒரு குறுகிய காலத்துக்கே இருந்தது மற்றும் இப்போது 13வது திருத்தம் ஒரு அர்த்தமற்ற நிலையிலேயே உள்ளது. இரண்டு மாகாணங்களின் இணைப்பை பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து மூவின சமூகத்தினருடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை தகர்ந்ததோடு அநேகமான மாற்றங்கள் நடந்தேறியுள்ளன.கிழக்கு மாகாணத்தில் வாழும் மூன்று சமுதாய மக்களினதும் அரசியல் அபிலாசைகளுக்கு ஊறு விளைவிக்காமல் தொலைநோக்குப் பார்வையுடன் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியாக கையாள வேண்டும்.

  • கேள்வி: 13வது திருத்தம் மற்றும் திட்டமிடப்படும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக  உங்கள் கருத்து என்ன?

பதில்: 13வது திருத்தத்தை பொறுத்தமட்டில் அது பாரிய அதிகாரப்பரவலாக்கத்துக்கு ஒரு ஆரம்பமாக இருந்தது. எனினும் தமிழ் தலைவர்கள் அதேபோல தென்னிலங்கை அரசியல் முன்னணி ஆகியோர் மத்தியில் இருந்த பொதுவான எண்ணம் அரசியலமைப்பின் 13வது திருத்தம் மேலும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதே. தெற்கின் அனைத்து அரசாங்கத் தலைவர்களும் 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டிருந்தார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அதிகாரத்தை பரவலாக்குவதற்காக 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்றிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 13வது திருத்தம் பற்றி விரிவாகப் பேசினார் மற்றும் 13 பிளஸ் என்பது அவரது மந்திரமாக இருந்தது.

எனவெ இப்போது நாங்கள் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் பணியாற்றும்போது, அதிகாரத்தை பரவலாக்குவது சிறுபான்மையினருக்கு மிகவும் உகந்ததாக இருக்கவேண்டும். தற்போதைய தேசிய ஐக்கிய அரசாங்கம் ஐதேக மற்றும் ஸ்ரீலசுக ஆகிய இரண்டு பிரதான தேசிய கட்சிகளினதும் இணைப்பாகவும் மற்றும் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பல கட்சிகளினதும் உதவியுடனும் இயங்குகிறது.பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு அரசியல் பிரச்சினைகள் அதேபோல தேசிய நலன்கள் சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதில் ஒரு சமரச அணுகுமுறையையே பின்பற்றுகிறது. எனவே அரசியலமைப்பை வரைவு செய்வதில் அற்ப நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் பரந்த பார்வையைச் செலத்துவதற்கு உகந்த நேரம் இதுதான்.

முந்தைய அரசியலமைப்புகள் சிறுபான்மையினர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தவறி இருப்பதினால் புதிய அரசியலமைப்பு நாட்டின் ஒருமைப்பாட்டை பேணும் சிறந்த நோக்கத்துடன் சிறுபான்மையினருக்கு ஒரு மாற்றாக அமைய வேண்டும்.

  • கேள்வி: இப்போது நிங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு முன்வந்திருக்கிறீhகள். வரப்போகும் தேர்தலில் நீங்கள் உங்கள் தமிழ் சோஷலிச ஜனநாயகக் கட்சியை களத்தில் இறக்கி உங்கள் இருப்பை ஒரு வேட்பாளராக உணர்த்தத் திட்டம் வைத்துள்ளீர்களா?

பதில்: அப்படி என்றில்லை. தமிழ் சோஷலிச ஜனநாயகக் கட்சியை நான் உருவாக்கியது, நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நடைமுறைக்கேற்ற அணுகுமுறையை கையாண்டு தீர்வு காண்பதைத் தொடருவதற்கே. தமிழ் அரசியல் கட்சிகளிடையே இந்த நேரத்தில் ஒற்றுமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. எனவே ரி.என்.ஏக்குள் எனது வருகை கூட்டைப் பலப்படுத்துவதற்கே. ஈபிஆர்எல்எப் பைத் தவிர அதில் உறுப்பினராக உள்ள கட்சிகள் ரி.என்.ஏ யின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையே நாடுகின்றன. கிட்டத்தட்ட பதினைந்தது வருடங்களுக்குப் பின்னர் நான் இந்தியாவிலிருந்து திரும்பி வந்துள்ள நேரம், நான் என்னை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களிடையே மேலும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ரி.என்.ஏ உடன் இணைந்து பணியாற்றும் எனது முடிவை பெருந்தொகையான மக்கள் வரவேற்றுள்ளார்கள். ஆகவே சரியான தருணத்தில் தேர்தலில் போட்டியிடுவது பற்றி நான் தீர்மானிப்பேன். எல்லாவற்றிலும் மேலாக நான் ஒரு ஸ்ரீலங்கா குடிமகன். இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை கலைந்ததினால் மட்டுமே நான் இந்தியாவில் புகலிடம் கோரியிருந்தேன்.
நாட்டில் உள்ள மற்றும் சிலரைப்போல எனக்கு இரட்டைக் குடியுரிமை எதுவும் கிடையாது. நான் முற்றிலும் ஒரு ஸ்ரீலங்கன் மற்றும் நான் எனது மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன்.

ஆனந்த் பாலகிட்னர்

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்