பிலிப்பைன்ஸில்  இருந்து 6 மெற்றிக்தொன் தேங்காய் பூரான்கள் அடங்கிய கொள்கலன்கள், இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார ​சபை தெரிவித்துள்ளது.

இவை தனியார் நிறுவனங்களின் ஊடாக, கொழும்புத் துறைமுகத்தில், நேற்று முன்தினம்  திங்கட்கிழமை இறக்கப்பட்டன என்றும், நாட்டில் நிலவுகின்ற தேங்காய்த் தட்டுப்பாட்டுக்கு மாற்றீடாகவே, தேங்காய் பூரான்களை இறக்குமதி செய்வதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதாகவும் தெங்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், தேங்காய் பூரான்களை இறக்குமதிச் செய்வதற்கு, 13 தனியார் நிறுவனங்களுக்கு, தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அனுமதியளித்திருந்தது. அதில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே, இறக்குமதி செய்துள்ளன.

ஏனைய இரண்டு நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் பூரான்கள் வந்துகொண்டிருக்கின்றன என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தத் தேங்காய் பூரான்களை, தேங்காய் ​எண்ணெய் மற்றும் தேங்காய்ப் பால் ஆகிய உற்பத்திகளுக்காகப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள தேங்காய் பூரான்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள், துறைமுக தாவர பரிசோதனை நிலையத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அந்த அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.