மத்திய வங்கி திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி  ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 17 .01.2018 பாளுமன்றத்தில்  ஆற்றுப்படுத்தப்படுமென ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஊடாக ஜனாதிபதி  உறுதியளித்திருப்பதாக, சபாநாயகர் கரு  ஜயசூரிய சபையில் தெரிவித்துள்ளார்.

எனினும், பாரிய நிதி மோசடிகள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  அறிக்கையின் பிரதிகள் தம்மிடம் இல்லையென்றும், அந்த பிரதிகளை ஆணைக்குழுவின்  செயலாளரிடம் கோரியிருப்பதாகவும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ கடிதம் மூலம் தமக்கு அறிவித்திருப்பதாகவும் சபாநாயகர் இதன்போது  தெரிவித்திருந்தமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு  ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோரியிருந்தேன். அதற்கான பதில் கடிதம்  ஜனாதிபதியின் செயலாளரினால் நேற்று காலை அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்தக்  கடிதம் அனுப்பப்பட்டிருந்த நேரத்தில் சபைக்கு நான் வந்துவிட்டதால்  கடிதத்தை பார்க்கக் கிடைத்திருக்கவில்லை என்றும் கூறினார்.

எவ்வாறிருப்பினும், ஜனாதிபதியிடம் கோரப்பட்ட பிணைமுறி விவகாரம் பற்றி  ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் 26 பிரதிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி  பாராளுமன்றத்துக்கு வழங்கப்படும் என்றும் அந்தக்கடிதத்தில்  குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் சபாநாயகர் ஜயசூரிய தெரிவித்தார்.

அத்துடன், சம்பந்தப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  அறிக்கைதொடர்பில் கடந்த 2 ஆம் திகதி சட்டமா அதிபரின் ஆலோசனையைக்  கோரியிருந்ததாகவும், அதற்கமைய 8 ஆம் திகதி சட்ட மா அதிபர் ஆலோசனை  வழங்கியிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அவற்றின் சட்ட  ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு  ஆணைக்குழுவின் அறிக்கையை அனுப்புமாறும் சட்ட மா அதிபர் ஆலோசனை  வழங்கியுள்ளார்.

இதன் பிரகாரம், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் இலஞ்ச, ஊழல் தடுப்பு  விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பிணைமுறி  ஆணைக்குழுவின் பிரதிகள் புதன்கிழமை காலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும்  அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை பிரதிகளை எதிர்வரும்  17ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு ஜனாதிபதி தனக்குப் பணிப்புரை  விடுத்திருப்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பாரிய நிதி மோசடிகள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  அறிக்கையின் 34 பிரதிகள் தம்வசம் இல்லையென்றும், அவற்றின் பிரதிகளை  சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவின் செயலாளரிடம் கோரியிருப்பதாகவும் அவை  கிடைத்ததும் அனுப்பி வைப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயத்தில் ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும்  இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள தாம் விரும்பவில்லை என்றும்  சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்