.முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளால் அநுராதபுரத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட  இரண்டு தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்திய அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தை இரத்துச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய அந்த விசேட மேல் நீதிமன்றம், எதிர்காலத்தில் வடமத்திய மாகாண 2ஆம் இலக்க மேல் நீதிமன்றமாக பெயரிடப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் ​விசேட மேல் நீதிமன்றம், 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதிபயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வழக்குகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்துவதற்கு  பிரதம  நீதியரசர் மொஹான் பீரிஸினால்  நிறுவப்பட்டது.

அநுராதபுரம் விமானப்படை முகாமின் மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகாய மற்றும் தரைவழியகாக ஒரே நேரத்தில் தாக்குதலை மேற்கொண்டனர்.   இதனால், இலங்கை விமானப் படைக்குச் ​சொந்தமான, 10 விமானங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. இன்னும் 6 விமானங்கள் பகுதியளவில் சேதமடைந்தன.

பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் 14 பேர் பலியானார்கள். 400 கோடி ரூபாய்க்கு மேல், சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது. அந்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு இந்த விசேட மேல் நீதிமன்றத்திலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இதேவேளை, மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேரை, தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட சம்பவத்தின் வழக்கும் இந்த நீதிமன்றத்திலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.