கோப் குழு நடத்திய விசாரணை அறிக்கை மீதான சட்டமா அதிபரின் அடுத்தகட்ட நடவடிக்கையை சபைக்கு அறிவிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரிடம் தாம் வினவியதாகவும், இதன்படி சட்டமா அதிபர் வழங்கிய பதிலை சபைக்கு சமர்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு பாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும்  பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய நிதிமோசடி விவகாரம் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம்  நடைபெற்றது.

இந்த விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்படி தெரிவித்தார்.

மேலும் இந்த விசாரணை அறிக்கைகள் மீதான விவாதம் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேர்தல் காலம் என்பதால் உறுப்பினர்களின் வருகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால் இன்று கலந்துகொள்ள முடியாமற்போயுள்ள உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 20,21ஆம் திகதிகளிலும் சபை கூடும்போது உரையாற்ற வாய்ப்பளிக்க கட்சித் தலைவர்கள் சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அரச முயற்சியாண்மை யில் இடம்பெற்றுள்ள ஊழல்,மோசடி விவகாரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 பேர்வரை சிக்கியிருப்பதால் அதுகுறித்து விசாரணை செய்த கோப் குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது