யுத்த நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை பணியாளர்கள் எந்தவித கொடுப்பனவுகளும் வழங்கப்படாது கடந்த 28வருடங்களாக அநாதரவாக விடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதனால் பல பணியாளர்களது குடும்பங்கள் பட்டினிசாவை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990 ம் ஆண்டின் ஜீன் மாதம் ஓட்டுத்தொழிற்சாலை யுத்தம் காரணமாக மூடப்பட்ட வேளை அங்கு சுமார் 74 பேர் பணியாற்றிக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகின்றது.அவர்கள் அனைவரிற்கும் கடந்த 28வருடங்களாக ஊதியமோ இழப்பீடுகளோ மாறி மாறி ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசினாலும்  வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் அப்போது கைத்தொழில் அமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதல் பின்னர் அமைச்சர்களாக இருந்த டக்ளஸ் தேவானந்தா,றிசாத் பதியுதீன் என பலரது கவனத்திற்கு இந்த விடயத்தை பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கொண்டு சென்றிருந்தனர்.
ஆனால் இதுவரை அவர்களிற்கு எந்தவொரு தீர்வும் கிட்டியிருக்கவில்லை.

இந்நிலையில் யுத்த காலங்களில் மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை,ஆனையிறவு உப்பளம்,பரந்தன் இரசாயனத்தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களிற்கு ஊதியமோ அல்லது இழப்பீடோ வழங்கப்பட்டுள்ளது.பலர் இழப்பீடுகளுடன் ஓய்வில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை பணியாளர்கள் எந்தவித கொடுப்பனவுகளும் வழங்கப்படாது கடந்த 28வருடங்களாக அநாதரவாக விடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது மீண்டும் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையினை மீளத்திறப்பது தொடர்பில் அரசினால் பேசப்படுகின்றது.
இந்நிலையில் யுத்தகாரணமாக பாதிக்கப்பட்ட பணியாளர்களிற்கு உரிய இழப்பீட்டையோ அல்லது சம்பள நிலுவைகளையோ அரசு வழங்கவேண்டுமென அவர்கள் மீண்டும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.