நேற்று முன்தினம் முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பின் பின்னர் நாட்டின் சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர  தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 85 வேட்பாளர்கள் உட்பட 668 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் காலத்தின் போதும் அதற்குப் பின்னரும் இவர்களை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த 10ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிவதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பே காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

எனவே பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்த அவர், இனிவரும் காலங்களிலும் இவ்வாறு சுமூகமான முறையில் நாட்டின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு தமக்கு தேவை என்றும் வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.