அமைச்சர்கள் ஜெனீவா விஜயம்

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில்  கலந்து கொள்வதற்கு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா  விஜயம் செய்யவுள்ளார்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா  எதிர்வரும் 25 ஆம் திகதி காலை  ஜெனீவாவிற்கு விஜயம் செய்யவுள்’ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை  பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமைச்சர்களான ஜீ.எல்.பிரிஸ், மஹிந்த சமரசிங்க, நிமல் சிறி பால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா,  டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கிம், ரிஷாட் பதியுதீன் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்தன ஆகியோர் ஏற்கனவே ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இலங்கை பிரதிநிதி கடிதம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை அரசியல் காரணங்களை முன்வைத்து அதன் உறுப்பு நாடுகளை உதாசீனபடுத்தி செயற்படக்கூடாது என ஜெனீவா கிளைக்கான இலங்கை பிரதிநிதி தமார குணநாயகம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபை அரசியல் காரணங்களுக்காக பக்கசார்பாக செயற்படுவது சட்டத்திற்கு புறம்பான செயல் எனவும் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம்

ஐ. நா. கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு தமது நாடும் ஆதரவு வழங்கவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற “இலங்கையின் மனிதஉரிமைகள்” என்ற தலைப்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தொடர்ந்தும் ஆதரவு

இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ரஷ்யா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விளாடிமீர் பீ மிகொய்லா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்ச்சாட்டுக்கள் இடம்பெற்றிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இறையாண்மையுடைய ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையீடு செய்ய கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஒரு நாட்டில் ஆட்சி செய்யும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் பொறுப்பு பலம்பொருந்திய நாடுகளுக்கு கிடையாது என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விளாடிமீர் பீ மிகொய்லா தெரிவித்துள்ளார்.