இலங்கையின் அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில், அங்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கில் போர்ப் பகுதியில் 9000 மக்கள் இறந்ததாக பிபிசிக்கு அறியகிடைத்திருக்கிறது.

இவற்றில் 7000 இற்கும் அதிகமான மரணங்கள் நேரடியாக இராணுவ மோதல்களுடன் தொடர்புபட்டவையாகும்.

இந்த அளவுக்கு அங்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியத்தரும் முதலாவது அரசாங்க புள்ளிவிபரம் இதுவாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக பல வெளிநாட்டு விமர்சகர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த எண்ணிக்கை இதனை விட பல மடங்கு அதிகம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த சில நாட்களில் அரசாங்கம் தனது மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வடக்கில் உள்ள மக்களை அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் செவ்வி கண்டு இந்த தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த மரணங்களின் புள்ளிவிபரம் மிகவும் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியவை.

அந்த அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் – அதாவது போரின் இறுதி நாட்களில்- 7400 பேர் ”பிற” என்று கூறப்படும் காரணத்தினால் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அங்கு அவர்களது இறப்புக்கான காரணம் கூறப்படவில்லை.

அதன் அர்த்தம் என்னவென்றால், அவர்கள், இயற்கையாகவோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ அல்லது தனிப்பட்ட கொலை செய்தோ இறக்கவில்லை ஆகவே அவர்கள் மோதலினால் இறந்திருக்கலாம்.

இறுதிப் போரின் இரத்தக்களரி இடம்பெற்ற முல்லைத்தீவிலேயே இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கிறார்கள்.

மேலும் 2009 ஆண்டு முழுவதிலுமாக 2600 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கிறார்கள்.

இந்த இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்களா அல்லது விடுதலைப்புலிகளா அல்லது அவர்களது இறப்புக்கு யார் பொறுப்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.

முதலில் தாம் பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை என்று கூறிய இலங்கை அரசாங்கம், பின்னர் அண்மையில் ”சில பொதுமக்களை தமது தரப்பு கொன்றிருக்கலாம்” என்று ஒப்புக்கொண்டதுடன் இது ஒத்துப் போகிறது.

ஐநா ஆரம்பத்தில் கணித்த எண்ணிக்கையுடன் இந்த இறந்தவர்களின் எண்ணிக்கை ஒத்துப்போகிறது. ஆனால் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட 40 000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற கூறப்பட்டதில் இருந்து இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

அதேவேளை பிறிதொரு நிகழ்வாக ஐநாவின் மூத்த அதிகாரியான லூயிஸ் ஃபிரச்செட் அவர்களால், இலங்கையின் இராஜதந்திரியான சவேந்திர சில்வா ஒரு ஐநா ஆலோசனைக்குழுவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டமை குறித்து ஐநாவுக்கான இலங்கையின் குழு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஆசிய நாடுகளால் இந்தக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சவேந்திர சில்வாவை விலக்கி வைப்பதில் ஐநா உயர் அதிகாரி ”அராஜகமாக, சகிக்க முடியாத ” வகையில் நடந்துகொண்டிருப்பதாக அது கூறியுள்ளது.

சவேந்திர சில்வாவால் தலைமைதாங்கப்பட்ட இராணுவ பிரிவு, ஐநாவின் குழுவினால், போர் குற்றங்களுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.